- 302 -

நின்று, சுடுகின்ற  - வருத்துகின்ற, நரகத்துள் - அவ்வைந்தாம் நரகத்தில்,  அமிழ்தமதிஉறுவ அல்லல் - நின் தாயாகிய அமிர்தமதி   அடைகின்றனவாகிய துன்பங்கள், இவை அல்லனஉம் - (யான் கூறிய)  இவையல்லாதன,  எல்லை இல - எல்லை யில்லாதனவாகும் :  (அவை), இது இது என எண்ணி -  இன்னது  இன்னது  என எண்ணி, ஒருநாவின் சொல்ல உலவா  - என் ஒரு நாவினால் எடுத்துக் கூறமுடியாதனவாகும்:  (ஆதலின்),   ஒழிக - அவை கெடுக.

அமிர்தமதியடையுந் துன்பங்களை என் ஒரு நாவாற் கூறுதல் முடியாது என்றாரென்க.

தொல்லைவினை - அநாதிகாலமாக தொடர்ந்த வினைகளுமாம். ‘இவ்வென வுரைத்துமென்று  நினைப்பினும் பனிக்கு முள்ளம்‘ (சீவக. 2762) என்றது,  ஈண்டு அறியத் தகும்.

290.  எண்ணமி லிசோதரனொ டன்னையிவர் முன்னாள்
  கண்ணிய வுயிர்க்கொலை வினைக்கொடுமை யாலே
  நண்ணிய விலங்கிடை நடுங்கஞர் தொடர்ந்த
  வண்ணமிது வடிவமிவை வளரொளிய பூணோய்.

(இ-ள்.) வளர் ஒளிய பூணோய் - மிக்க ஒளியுடையனவாகிய அணிகளை அணிந்த அரசே !  எண்ணம் இல் இசோதரனோடு அன்னை இவர் -  ஆராய்தல் இல்லாத யசோதரனும்சந்திரமதியும் ஆகிய இவர்கள்,  முன்னாள் - முன்னாளில், கண்ணிய உயிர்க்கொலை - உயிரென்று கருதிச் செய்த உயிருருவப் பலியினது, வினைக்கொடுமையாலே - கொடிய தீவினையினால், நண்ணிய விலங்கு இடை - (அவ்விருவரும்) அடைந்த விலங்குகதியினிடத்தே, நடுங்கு அஞர் தொடர்ந்த வண்ணம் இது - நடுங்கத் தக்க துன்பங்கள் பற்றிய தன்மை இதுவாகும்:  வடிவம் இவை - (அவர்கள் எடுத்த)  வடிவங்கள் இவையாகும். (எ-று.)

மன்னனும் தாயும் மாரிக்குப் பலியிட்ட தீவினையால் எய்திய துன்பங்களும் பிறவிகளும் அவையாகும் என்றனர் என்க.  மேல் இரண்டு பாட்டுக்களில் கூறும் பிறப்புகளி்ன் வடிவங்களைத் தொகுத்து, ‘வடிவமிவை‘ என்று சுட்டினார்.