- 321 -

எண்ணற்ற வெந்துயர் அடைதலால் உண்டாகும் பழி, உலகோர் கூறும்  நிந்தைமொழியாம்.  ‘உலகம் பழித்தது’ என்றார் (குறள். 280) தேவரும். ‘புகழ்மொழி புணையாக‘ என்பது ‘இவ்வுரை யெனுற் தோணி‘ (மேரு. 727.) என்றதனோடு ஒப்பிடற்பாலது.  மாதவம் - திகம்பரதவம்.  தவக்கடல் ஆடுதலாவது, எப்பொழுதும் தவஞ்செய்து இன்புறுதல். ‘அவர் நற்குணக் கடலாடுதல‘என்று கவிச்சக்கரவர்த்தி கூறியிருப்பது ஈண்டு அறியத்தகும்.  மை - குற்றம்: முக்குற்றம்.  அவை: ஆசை கோபம் மயக்கம்.  ‘இனியென்றான்‘ என்றும் பாடம்.                           (94)

314.  இன்சொல் மாதரு மிளங்கிளைச் சுற்றமு
 
       மெரித்திர ளெனவஞ்சிப்
  பொன்செய் மாமுடிப் புதல்வருட் புட்பதந்
 
       தற்கிது பொறையென்றே
  மின்செய் தாரவன் வெறுத்தன னரசியல்
 
       விடுத்தவ ருடன்போகி
  முன்சொன்  மாமலர்ப் பொழிலினுண் முனிவரற்
 
       றெழுதுநன் முனியானான்.

(இ-ள்.) மின் செய் தாரவன் - ஒளி செய்யும் மாலையுடையனாகிய மாரிதத்தன், இன்சொல் மாதரும் - இனிய சொல்லையுடைய மகளிரையும்,  இளம் கிளைச் சுற்றமும் - இளைஞராகிய சுற்றத்தையும், எரித்திரள் என அஞ்சி

தீயின் திரள் என்று கருதி அஞ்சி, அரசுஇயல் வெறுத்தனன் - அரசியலில் வெறுப்புற்று , புதல்வருள் புட்பதந்தற்கு இது பொறை என்று - தன் புதல்வர்களுள் புட்பதந்தன் என்பவனுக்கு இவ்விராஜ்ஜிய பாரம் உரித்தாகும் என்று, பொன் செய் மாமுடி விடுத்து - பொன்னால் செய்த முடியைச் சூட்டி, அவருடன்  - அபயருசி அபயமதி என்பவருடன்.  முன்சொல் மாமலர் பொழிலினுள் போகி-முன் (யசோ, 24ல்) கூறிய   பூஞ்சோலையில்  சென்று, முனிவரன் தொழுது - சுதத்த முனிவரை வணங்கி (தீக்ஷை பெற்று), நன் முனி யானான் - சிறந்த (ஜிந) முனியானான்.

மாரிதத்தன், துறவு பூண்டானென்க.