தன் நிலையில் நரைமயிரொன்று கண்டு வாழ்க்கை நிலையாமையைக்கருதி துறக்கஎண்ணி, யசோதரனுக்கு முடிபுனைந்து, துறவியானான்.

யசோதரனும் தேவியோடுகூட வாழ்ந்து வந்தான்.  அக்காலத்தில் அரசியாகிய அமிர்தமதி பழவினைப் பயனால் யானைப்பாக னொருவனுடன் கூடி ஒழுகுவதனை நேரில் கண்ட மன்னன் வெகுண்டு அவ்விருவரையும் கொல்லுவதற்கு வாளோங்கினானாயினும், பின்னர்ச் சினந் தணிந்து துறக்கக் கருதி மீண்டு, தாயினிடம்தன் மனைவியின் தீயச்செயலை உள்ளவாறு உரைப்பதற்கின்றி அதனை மறைத்து ஒரு தீய கனவு கண்டதாகக் கூறினான்.

உண்மையை உணரவியலாத சந்திரமதி தனையனை நோக்கி, மாரிக்குப் பலியிட்டு வணங்குமாறு கூறினான்.  அத் தீமொழியைக் கேட்ட மன்னன் நடுங்கி தாயின் மொழியை மறுத்து நீதிகள் பலமொழிய, அவள் சினந்து, “அம்மன் மகிழுமாறு மாக்கோழியையாவது பலியிடவேண்டும்” என்று வற்புறுத்தினாள்.  மன்னன், தாயின்பால் கொண்ட அன்பினாலும், தீவினையினாலும், அதற்கிணங்கி அரிசிமாவினால் செய்து வர்ணம் பூசப் பெற்ற கோழியொன்றை காளி கோயிலுக்கு எடுத்துச் செல்வுழி, வானுறை தெய்வமொன்று விரும்பி அம்மாக்கோழியினுள் புகுந்து தங்கியிருக்க மன்னன் அதனை மாரிக்குப் பலியிட்டான். உடனே அம்மாக்கோழி தெய்வத் தன்மையால், கூவித் துடிதுடித்து வீழ்ந்தது.  அதனைக் கண்ட மன்னன் நடுநடுங்கி, பலவாறு சிந்தித்து துறவு மேற்கொள்ள முயன்றான்.  அதனையறிந்த தேவி அமிர்தமதி, ‘நம் செயலை அறிந்து அவமதித்தான் போலும்! என்று கருதி, வஞ்சனையால் பல நயப்பு மொழிகளைக் கூறி மன்னனையும் மாமியையும் விஷம் கலந்த லட்டுகளை உண்பித்துக் கொன்றாள்; உண்மையறிந்த உழையரும், அறியாத மாந்தரும் பலவாறுகூறி வருந்தி ஈமக் கடன்களை நிறைவேற்றியபின், அமிர்தமதிமகனுக்கு முடி சூட்டுவிக்க, யசோமதி மன்னனானான்.

விஷம் உண்டிறந்த மன்னன் மயிலாகவும், சந்திரமதி நாயாகவும் பிறக்க அவற்றை வளர்த்தவர்கள் யசோமதி வேந்தனுக்கே கையுறைப் பொருளாகத் தர, அவை அரண்மனையில் உலவி வரும் நாட்களில் ஒருநாள், பாகனைச் சேர்ந்திருந்த அமிர்தமதியின் செயலைக் கண்ட மயில் பழம் பிறப்புணர்வால் பாகன் கண்களைக் குத்தி அழிக்க, அவள் சினந்து திரண்டகல்லால் மயிலின் தலையில் அறைய, அது குற்றுயிராய் வீழ்ந்தது. அதனை யறிந்த நாய் மயிலைக் கவ்வி எடுத்து அரசனுக்குக் காட்டுவான் செல்ல, மயில் நாயின் மேலும் வைரங் கொண்டு இறந்து, விந்தயமலைச் சாரலில்