முள்ளம்பன்றியாய்ப் பிறந்தது,  மயில் மடிந்ததற்குக் காரணம் நாயே யாகுமென மாறாகக் கருதிய மன்னன், சூதாடு பலகையால் அந்நாயையும் அடித்துக் கொல்ல, அதுவும் மேற்கூறிய மலையிடத்தே கரும்பாம்பாய்ப் பிறந்து, முள்ளம்பன்றியால் மடிந்து உஞ்சயினியின் அருகிலுள்ள சிருப்பிரையாற்றினுள் முதலையாய்பிறந்தது.  முட்பன்றியும் ஒரு கரடியால் மடிந்து அவ்வாற்றிலேயே உலோகிதம் என்னும் மீனாய்ப் பிறந்தது.

வைரத்தால் அம்முதலை, லோகி மீனை விழுங்கவேண்டி அதனைத் துரத்திச்செல்லுங்கால் அங்கு நீராடிய அரசனுடையதாதி யெதிர்ப் பட்டாளை விழுங்கிவிட்டது. அதனையறிந்த ஏவலர் மன்னன் ஆணையால் அம்முதலையைப்பிடித்து வதைக்க, அது, பெண்யாடாய்ப் பிறந்தது.  பின்னர் லோகித மீனும் அந்தணரால் மடிந்து மேற்கூறிய பெண்யாட்டின் வயிற்றில் தகராய் பிறந்து வளர்ந்து தன் தாய்ஆட்டினையே காமத்தால் புணர அதனைச்சகியாத மற்றோர் வலிய ஆட்டுக்கிடாய்பாய அதனால்மடிந்து மீண்டும் அத்தாய்வயிற்றில் தனிவிந்துவிலேயே தகராய், கருமுற்றி வளர்வதாயிற்று.  பின்னர் வேட்டை மேற்சென்ற யசோமதி கருமுற்றிஆட்டை பாணத்தாலடிக்க, தாய்ஆடு இறக்க, அம்புபட்டவழி வந்த தகர்குட்டியை யசோமதி கருணையால் ஓர் புலையனிடம் கொடுத்து வளர்க்குமாறு பணித்தனன். மன்னன் மற்றொருநாள் மாரிக்குப் பலியிட்ட எருமையூனை, ‘இஃது யோனியில் பிறவாத ஆடு நுகருமாயின் சிராத்தத்திற்கு ஆகும்’ என்று அந்தணர் கூற, புலையனிடமிருந்த ஆட்டைத் தருவித்து நுகரச் செய்து சிராத்தாஞ் செய்யும் பொழுதும் அவ்யாடு பழம்பிறப்புணர்ந்து துன்புற்று அரண்மனையிலேயே தங்கியிருக்க, முன் யசோமதியாயிருந்த தாய்ஆடு, கலிங்கதேசத்தில் எருமையாய்ப் பிறந்துவர்த்தகரின் வணிகப்பொருளைச் சுமந்து திரியுங்கால், வணிகர் ஒருநாள் உஞ்சயினி நகரில் ஆற்றின்கரையில் வந்து தங்கி, எருமையைநீரில் மூழ்கிவிட, அவ்வெருமை அங்கு நீருண்ணவந்த ராஜஹம்ஸம்என்னும் அரசன்குதிரையைப் பாய்ந்துகொன்றது.  அதனால் ஏவலர்அரசன் ஆணைபெற்று அவ்வெருமையைச் சித்திரவதை செய்து நெருப்பிலிட்டுக் கொன்றனர்.  அவ்வமயம் தொழுநோயால் மூழ்கிய அமிர்தமதி வைரத்தால் அவ்வெருமையூனைத் தின்று, அரண்மனையிலுள்ள ஆட்டையும் கொணருமாறு சேடியரை ஏவ, அவர்களும்அவளை இழித்துக் கூறிக்கொண்டே தகரைப் பிடித்துவந்தனர். பழம்பிறப் புணர்ந்து வருந்திய அவ்யாடும் அவளால் அழிக்க உயிர்பிரிந்து முன்கூறிய எருமையுடன் கோழிப்பிறப்பெய்தி, போரிலும்அழகிலும் சிறந்திருக்க, அவைகளை யசோமதி மன்னன் கண்டு மகிழ்ந்து சண்டகருமனிடம் கொடுத்து, வளர்க்குமாறு பணித்தான்.  பின்பு ஒரு நாள் மன்னன் வேனிற் காலத்தில் சோலையின் கண், புட்பாவலி யென்னுந் தேவியுடன் ஆடல் பாடல் முதலியன கண்டு களித்து உறங்குவானாயினான்.  அவ்வமயம் காவல் புரிந்த சண்டகருமன் அவ்வனத்திருந்த அகம்பன ரென்பாரொரு தபோதனரை வணங்கி அறங்கேட்டு இல்லறத்திற்குரிய அகிம்சாதி விரதங்களை அவரிடம் கைக்கொண்டான்.  அவனுடனே கூட்டிலிருந்த கோழிகளும் அவ்வறவுரையால் தங்கள் பழம்பிறப்புணர்ந்து விரதத்தை மேற்கொண்டு மகிழ்ந்து கூவின.  அவ்வொலியால் நித்திரை கலைந்த மன்னன் வெகுண்டு அக்கோழிகளைத் தன் பாணத்தா லடிக்க இறந்து, அவை, அவன் தேவி புட்பாவலியின் கருவில் தோன்றி அபயருசி அபயமதி யென்ற இரட்டைக் குழவிகளாயின.  புட்பாவலி மீண்டும் கருவுற்று யசோதரன் என்ற ஓர் ஆண்மகவையும் பெற்றாள்.  அம்மக்கள் இன்புற்று வளரும் நாட்களில் ஓர்நாள், யசோமதி வேட்டை மேற் செல்வுழி, எதிரே யோகத்தில் நின்ற சுதத்த முனிவரைக் கண்டு, திகம்பரமுனிகளைக் காணல் சகுன விரோதமென்று சினந்து,  வேட்டைமேற்சென்றும் அன்று ஒன்றும் பெற்றிலனாகி அதற்குக் காரணம் அம்முனிவனே யென்று எண்ணி அவரைக் கொல்லுதற்கு 500 வேட்டைநாய்களை ஏவினான்.  அவை, அம்முனிவனின் தவப்பெருமையால் அவரருகிலும் அணுகாது நிற்கத் தானே அவரைக் கொல்வதற்கு வாளை உருவி ஓங்கினான்.  அதனைக்கண்ட கல்யாணமித்திரனென்பவன் தடுத்து அம்முனிவரர் பெருமை முதலியன எடுத்துரைக்க, அதனால் மன்னன் சினந்  தணிந்து வருந்தி தன் தீமையைப் போக்கக் கருதித் தன் சிரசை அரிந்து காணிக்கையாக அவர் பாதத்திலிடக் கருதினான்.  அத்தீய நினைவைத் தம் ஞானத்தாலுணர்ந்த சுதத்த முனிவரர் உடனே தம் யோகத்தைவிட்டு, மன்னனைத் தற்கொலைபுரியாதவாறு தடுத்தாட் கொண்டதோடு அவனுக்கு அறம் பகர்ந்து, அசோகன் வானுலகி லின்புறுவதையும், அமிர்தமதி நரகத்தில் துன்புறுவதையும், யசோதரனும் சந்திரமதியும் முறையே அபயருசியும் அபயமதியு மாகப் பிறந்ததையும், மற்றும் பலவற்றையும் விளங்கவுரைத்தார், யசோமதி மன்னனும் அவள் மக்களாகிய அபயருசி அபயமதி முதலிய யாவரும் வருந்தி, திருவறம் மேற்கொண்டு சங்கமுடன் இந்நகர் சோலையின்கண் வந்துள்ளார்.  அவர்களில் யாங்களே அபயருசி அபயமதியென சகலமும் கூறியருள, அவற்றைக் கேட்ட மாரிதத்தன் முதலியோர் தீகைஷ பெற்று நற்கதியடைந்தனர்.

சுபம்,