ஆராய்ச்சிப் புலவர் திரு. ஒளவை, சு. துரைசாமிப்பிள்ளையவர்கள் இந் நூலூக்கு உரையெழுதி 1944-ல் வெளியிடுவித்தார்கள்.  அவ்வுரை பதவுரை விசேடவுரையுடன் அமைந்துள்ளது, பிள்ளையவர்களின் உரை உயர்ந்த நடையினை யுடையது; மேற்கோளையும் இலக்கணக் குறிப்புக்களையும் கொண்டுளது.

பிள்ளையவர்களின் உரை வெளிவந்ததும் மிக்க ஆவலுடன் அந்நூலைப் பெற்று வாசித்தேன். உரையில்லாத பழைய நூலுக்கு அவர்கள் எழுதியுள்ள உரையைப் பார்த்து  உவந்தேன்.  அவர்களுக்குப் பொதுவாகத் தமிழுலகமும் சிறப்பாக ஜைன சமூகமும் நன்றி பாராட்டுங் கடப்பாடுடையன.

பிள்ளையவர்களின் உரை முற்றும் படித்துப் பார்த்தபோது, ஆங்காங்கு 1ஜைன சமயக் கொள்கைகள் நூலுக்கு மாறாக எழுதப்பட்டிருப்பதையும், ஒரு சில விடங்களில் முதல்நூலுக்கு மாறாகப் பாடங்கொண்டு இயைபில்லாத உரை கூறப்பட்டிருத்தலையும் அறியலானேன்.

சமயக் கொள்கைகள் மாறாக எழுதப்பட்டிருத்தலின் அவற்றைப் படிப்போர் விபரீதஞானத்தை அடைவரேயென்று எண்ணி வருந்தினேன். பின்னர் மாறுபட்ட அவ்வுரையை பற்றிப் பிள்ளையவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  அவர்கள், ‘ஒரு நூலுக்குப் பலர் உரை எழுதலாம்; ஆதலின், தாங்களும் இதற்கு ஓர் உரை எழுதுங்கள்’ என்று பதில் எழுதினார்கள். அதன்பின் ஒருகால் அவர்களிடம் நேரிற் சென்று மாறுபட்ட உரைகளில் சிலவற்றைத் தெரிவித்தேன்.  அவர்கள் அப்பிழைகளைத் திருத்தி வெளியிடுவதாகக் கூறததனால் அவர்கள் கடிதத்தின்படி அடியேன் உரை எழுதத் தொடங்கினேன்.  அதற்காகப் பல பிரதிகளைப்பெற முயற்சி செய்தேன்.  ஏழு பிரதிகள் கிடைத்தன.

1.மேழியனூர் ஸ்ரீமான் அப்பாதுரை சாஸ்திரியார் ஏடு 1
2.ஆலக்ராமம்வ்ருஷபநாதசாஸ்திரி குமார் வஜ்ரபாகுநயினார் ஏடு 1
3.பெருமண்டூர் ஸ்வாமிகள் ஏடு 1

 

1 இவற்றை இம் முன்னுரையின் இறுதியில் காண்க