xii

(3) என் ஆயுள்முழுதும் சங்கரா சம்புவே எங்கள் பெருமானே! சிவனே அங்கணா ! என்று என்றும் ஓலம் இட்டு அழைத்து அரற்றுவதே பொழுது போக்காகின்றது .

(4) உன் திருவடிக்கே என்றும் ஒன்றாயிருக்கும் பொருளே உரியதாய்க் குறைவிலாததும் இடையறாததும் ஆன அன்பு, என்றும் எனக்கு உண்டாகுக.

(5) இம் மண்ணிற் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் தெய்வமென்று போற்றாத அபாக்கியவான்கள் என் குலத்தில் எய்தி எக்காலத்திலும் பிறத்தலாகாது. ஒருகால் பிறந்துவிட்டாலும் அது அப்பொழுதே செத்துத்தொலைய வேண்டும். எம்பெருமானே இவ்வரம் அடியேனுக்கு அருள்புரிவாயாக.

(6) விடைக்கொடி தூக்கியருளி மும்மதில் எரித்த முதல்வனே நீயே என்குல தெய்வமான முடிவிலாப் பாக்கியத்தால், எல்லாவுலகிலும் யானே பெருஞ்செல்வன் என்று மும்முறை சொல்லி யுறுதிப்படுத்துவேன் இவ்வுலகர்க்கு.

(7) பெருமானே! உமாபதியே! உன்னைச் சிறப்பான குலக் கடவுளாகக் கொள்ளாத கீழ்மகன் பிறந்த-பிறக்கின்ற-பிறக்குங் குலம் எதிலும் அடியேன் மறந்தும் பிறவாத பெருவாழ்வு எனக்கு வேண்டும்.

(8) அடியாராம் இமையவர் கூட்டம் உய்ய வேண்டி அலை கடல் நஞ்சு உண்ட அமுதமே! கருணைக்கடலே, மலையான் மடந்தை மணவாளா, உன் திருவடிக்கு என் முடிவணக்கம் உரியது.

இவ்வாறு நாள்தொறும் பலகாலம் திருவேகம்பன் திருவடியை முன்னிலையில் வைத்துத் திரிகரண சுத்தியுடன் தோத்திரம் பண்ணித் தூயசிந்தையராவது சைவர் எல்லார்க்கும் தனிப்பெருங்கடனாகும்.

இக்காஞ்சித் தலத்தில் சிவபிரான் காப்புக்கூத்து (திதிநடனம்) ஆடுவதால், தங்கள் வாழ்நாளை வளர்த்துக்கொள்ள விரும்பும் மக்கள் இத்திருவேகம்பத்து நடராசப் பிரானைத் தொழு துய்தல் வேண்டும்.

இங்குப் பெறும் முத்தியைக் ‘கேசாந்த முத்தி என்பர்’ க+ஈசன்=கேசன், அந்தம் -முத்தியே முடிவு, ஆதலின் அந்தம் எனப்படும். கேசாந்தம் என்பது தழுவக் குழைந்தபடலம் 68-ம் பாடல் முதலியவற்றிற்காண்க.

இப்புராணம் ஏனைய புராணங்களின் விசேடம் உடையதாய், ‘ஒழுக்கப்படலம்’ என்றும் சிவபுண்ணியப்படலம் என்றும் இரண்டு சிறந்த படலங்களை ஆசிரியர் பாடியருளியிருப்பது , உலகிற்கு ஒரு புதிய பாவலர் விருந்தாகும். சிவப்புண்ணியப் படலத்தில் மகேசுர மூர்த்தங்கள் எல்லாவற்றிற்கும் இலக்கணம் கூறி இருப்பதால், அன்பர் சிவநல் வினைவழி, அவற்றுள் உள்ளம் விரும்பியதொன்றை உபாசித்தல் வேண்டும் .