xxiv

நன்மதிப்பையும் நிரம்பப் பெற்ற பெரும்புலவர் ஆவார்கள். “கச்சித் திருவேகம்பர் மாலை” போன்ற சிறந்த கவிதை நூல்கள் யாத்தவர்கள்.

“மகனறிவு தந்தையறிவு” என்னும் பழமொழிக்கேற்பத் தம் தந்தையாரின் புலமை நலங்களையெல்லாம் தாமும்பெற்று, இவ்வுரை நூலைச் செவ்விதின் எழுதி முடித்திருக்கும் திரு. பொன். சண்முகம் அவர்களின் தொண்டு மிகவும் பாராட்டற்குரிய தொன்றாகும்.

இந்நூல் யாவர்க்கும் பயன்படவும், இந்நூலாசிரியர் எல்லா நலங்களும் எய்தி நீடினிது வாழவும், கச்சி ஏகம்பனின் கழலிணைகளை மனமொழி மெய்களால் வழுத்துகின்றேன்.

மா. சே. சாரங்கபாணி.

பாராட்டு அணிந்துரை திரு .  N.R. முருகவேள், M. A., M.O.L., அவர்கள்,  ஆசிரியர் :”திருக்கோயில்”

(வெண்பா)

ஆய கலையனைத்தும் ஆய்ந்துணர்ந்து கற்றுவல்ல
தூய சிவ ஞான சுவாமிகள்தாம், --நேயமிகக்
காஞ்சிப் புராணம் கவின்பெருகச் செய்தளித்தார்,
தீஞ்சுவைகள் எல்லாம் செறித்து!

தலச்சிறப்பைச் சாற்றும் புராணங்கள் தம்முள்
கலைச்சிறப்பார் காஞ்சிப் புராணம், --நலச்சிறப்புப்
பற்பலவும் வாய்ந்து, பயில்வார்க் கறிவூற்றாம்!
பொற்புமிக ஓங்கிப் பொலிந்து.

தொட்ட இடந்தோறும் தூயசைவ சித்தாந்த
நுட்பங்கள் தோற்றிஉயர் நோக்கமைந்து, மட்டில்லா
இன்பம் விளைக்கும்! இறையுணர்வில் தோய்விக்கும்!
நன்றுயர்காஞ் சிப்புரா ணம்.

இத்தகைய காஞ்சிப் புராணத்திற் கின்னுரைதான்,
வித்தகன் பொன் சண்முகனாம் மேதகையோன், --முத்தமிழ்தேர்
பொன்குமர சாமி அடிகள் புகழ்ப்புதல்வன்,
நன்குவரைந் தீந்தான்! நயந்து.

தேர்ந்த தமிழ்ப்புலமை, சித்தாந்த நூற்பயிற்சி,
சார்ந்துயர்பண் பெல்லாம், பொன் சண்முகன்தான்-- ஆர்ந்து நின்றான்!
கச்சிஏ கம்பன் கழலிணைகள் போற்றுகின்றேன்.
இச்சிறந்தோன் வாழ்க! இனி தென்று.

ந . ரா. முருகவேள்.