xxv

சிவமயம்

சிவஞான சுவாமிகள் தோத்திரம்

கருணைபொழி திருமுகத்தில் திருநீற்று நுதலும்
     கண்டாரை வசப்படுத்தக் கனிந்தவா யழகும்
பெருமைதரு துறவோடு பொறையுளத்திற் பொறுத்தே
     பிஞ்ஞகனார் மலர்த்தாள்கள் பிரியாத மனமும்
மருவினர்கள் அகலாத ஞானமே வடிவாம்
     வளர்துறைசைச் சிவஞான மாமுனிவன் மலர்த்தாள்
ஒருபொழுதும் நீங்காமல் எமதுளத்தில் சிரத்தில்
     ஓதிடுநா வினிலென்றும் உன்னிவைத்தே உரைப்பாம்.
--தொட்டிக்கலைச் சுப்பிரமணிய சுவாமிகள்.

திருச்சிற்றம்பலம்

கச்சியேகம்பர் ஆனந்தக்களிப்பு
ஆனந்தம் ஆனந்தம் தோழி--கம்பர்
ஆடுந் திருவிளை யாட்டினைப் பார்க்கில்
ஆனந்தம் ஆனந்தம் தோழி.
ஒன்றுவிட் டொன்றுபற் றாமல்--என்றும்
     ஒன்றுவிட்டொன்றினைப் பற்றவல் லாருக்(கு)
ஒன்றும் இரண்டுமல் லாமல்--நின்ற
     ஒன்றினை வாசகம் ஒன்றி லளிப்பார்

ஆனந்தம் ஆனந்தம் தோழி. 1

1. 1. ஒன்றுவிட்டு ஒன்று பற்றல் - மனம் ஒரு வழிப்படாமல் கணந்தோறும் வேறு வேறு பொருள்களைப் பற்றிவிடுதல்: அங்ஙனமன்றி ஒன்றியமனம் வேண்டும் என்றபடி.

2. ஒன்று விட்டு ஒன்றினைப் பற்றலாவது - உலகப்பற்றை விடுத்து முதல்வன் பற்றினைப் பற்றி அன்புசெய்து நிற்றல்.

3-4. ஒன்றும் இரண்டும் அல்லாமல் -நின்ற ஒன்று - முதற்பொருள் உயிர்களோடுஒன்றேவேறேஎன்பதின்றி உடனாந்தன்மையில் பிரிப்பின்றி நின்ற நிலை. இது ,கண்ஒருபொருளைக் காணும்போது , கண்ணொளியும் உயிரினறிவும் தானென மற்றையதெனப்பிரித்தறிய வாராது ஒட்டி நிற்பது போன்றது. இதனை அநந்நியம் என்றும்அத்துவிதம்என்றும் கூறுப .

4. ‘வாசகம் ஒன்று’ என்றது - சித்தாந்த மகா வாக்கியத்தை: திருவைந்தெழுத் தெனினுமாம்.