Lxv

சிவாகமங்களும் கூறுகின்றன என்றுள்ளதாலும் புராணச் சிறப்பு விளங்கும்.

தமிழ்ப் புராணங்களுள் (திருத்தொண்டர் புராணம் அல்லாதவற்றுள்) கந்தபுராணம், காஞ்சிப் புராணம், திருவிளையாடற் புராணம், சேதுபுராணம், திருக்குற்றாலத் தலபுராணம் முதலியவை அச்சூதனொலிமாலையைப் போலச் சிறப்புடையன.

காஞ்சிப் புராணம் கந்தபுராணத்தை யடுத்து வேதாகமப் பொருள்களை விளக்குந் திறத்தில் ஒப்புயர்வற்று விளங்கும் மாட்சிமிக்கது. இதன் சிறப்புக்களையும் ஆசிரியர் மாதவச் சிவஞான யோகிகளின் பெருமைகளையும் பின்னர் உள்ள அணிந்துரைகளால் நன்கறியலாகும். காஞ்சிப் புராணத்தின் பொருட்சிறப்பு முதலியவற்றை இதில் உணர்த்தும் ஆற்றல் இப்போது யாம் உற்றிலேம்; பல முறை பாராயணம் பண்ணிய பாக்கியம் உடையேம்; எம் வழிபடு கடவுள் அருள்வரலாற்று நூலாதலின்.

புராணங்களின் பொருள்களை உலகோர் உணர்தல்வேண்டி, நம் முன்னோர் வகுத்த இடங்களே புராணச் சிறப்பைப் புலப்படுத்தும். கோயில், ஆற்றங்கரை, குளக்கரை, திருமடம் ஆகிய இவற்றை இடமாக விதித்தனர். ஏன்? மக்கள் மிகக்கூடும் இடங்கள் பலவற்றுள் சாலச் சிறந்தவை இவை. திருமடத்தினும் குளக்கரையும், அதனினும் ஆற்றங்கரையும், அதனினும் கோயிலும் மக்கள் நெடுநேரம் இருந்தும் பலராகக் கூடியும் கேட்டுப் பயன் பெறுந் திறத்திற் சிறந்தன ஆகும். ஆறும் குளமும் (குளிப்பதற்குரியது) நீராடித் தூயராய பின்னர்ப் புராணக் கேள்விக்குத் தக்கவராதற் பொருட்டும், கோயிலும் மடமும் புராணப் பொருள் இனிது விளங்கி இன்புறுத்தற் பொருட்டும் கொள்ளப்பட்டன. நான்கிடமும் பலர்கூடும் இடமாதல் பற்றியே விதிக்கப்பட்டன. சமயப் பிரசாரம் புரியும் நெறியில் நம் முன்னோர்க்கு இருந்த நோக்கம் இதனாற் புலப்படும்.

இப் பதிப்பு, இக்காலத்தில் மிக்க வுதவியாகத் தோன்றிய ஒரு புதிய வெளியீடு. காஞ்சிப் புராணம் கிடைக்காத காலம் இது. காஞ்சிப் புராணத்தைக் கற்றுணர விரும்பாதவர் தமிழ்ப் புலவருள் இரார். இருப்பின், அவர் “நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை யென்போர்க்கு இனன் ஆகி’’ யவராயிருக்கலாம்.

இப்புராணம் பொழிப்புரையுடன் கூடியது. இவ்வுரை சாலச்சிறந்து விளங்குகின்றது. இதை யெழுதியவர் திரு. பொன். சண்முகனார் என்னும் புலவர். அவர் அணிந்துரை வழங்கிய பேராசிரியரிருவரிடத்திலும் தமக்கு முன்னிலையில் அப்பனாரும் ஆசிரியருமாகிய சைவத்திரு. பொன். குமாரசாமி அடிகளார் அவர்களிடத்திலும்