40அற்புதத் தேவாரத் திரட்டும்

 

புராணப் பாடற்றிரட்டும்

அற்புதத் தேவாரத் திரட்டும்

1. முன்னை நிலை

- புராணம்

1313.

மன்னுதபோ தனியார்க்குக் கனவின்கண் மழவிடையா
ருன்னுடைய மனக்கவலை யொழிநீயுன் னுடன்பிறந்தான்
முன்னமே முனியாகி யெனையடையத் தவமுயன்றான்
அன்னவனை யினிச்சூலை மடுத்தாள்வ மெனவருளி.

48

திருவாரூர் - திருத்தாண்டகம்

- தேவாரம்

பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
         பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்
மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்
         வானவரு மறியாத நெறிதந் தான்காண்
நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல
         நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்குந் திருவா ரூரிற்
         றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.

5

திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம்

கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்
         கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிக்
சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்
         சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கோ
         பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்
         செங்காட்டங் குடியதனிற் கண்டே னானே.

4

கல்லாதார் மனத்தணுகாக் கடவு டன்னைக்
         கற்றார்க ளுற்றோருங் காத லானைப்
பொல்லாத நெறியுகந்தார் புரங்கண் மூன்றும்
         பொன்றிவிழ வன்றுபொரு சரந்தொட் டானை
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்க நீங்க
         நிறைதவத்தை யடியேற்கு நிறைவித் தென்றும்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
         செங்காட்டங் குடியதனிற் கண்டே னானே.

8

2. சூலை நீங்கியது

- புராணம்

1314.

திரைக்கெடில வீரட்டா னத்திருந்த செங்கனக
வரைச்சிலையார் பெருங்கோயி றொழுதுவலங் கொண்டிறைஞ்சித்
தரைத்தலத்தின் மிசைவீழ்ந்து தம்பிரான் றிருவருளால்
உரைத்தமிழ்மா லைகள்சாத்து முணர்வு பெற வுணர்ந்துரைப்பார்.

69