இறுதிக் காண்டம் ஆரோகண காண்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளமை நினைந்து நினைந்து வியக்கத்தக்கதொரு செய்தி. இசைப் பாட்டில் ஏறுமுகமாகச் செல்லுவதை ஆரோசணம் என்பர். ஈங்கு இயேசுபெருமான் வானுலகம் ஏறிச் சென்றதை இச்சொல்லால் குறிப்பிடுவார் போன்று கிறிஸ்தவ சமய வளர்ச்சியின் ஏறுமுகத்தைக் குறிப்பிட்டுத் திருவவதாரத்திற்கு முடிவு கூறாமல் ஆரோகணமாக்கியிருப்பது அறிந்து உணர்ந்து இன்புறுதற்குரியதாம். கிறிஸ்தவ சமயத்திற்கு என்றுமே ஆரோகணந்தான். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தாங்கள் தமிழர் என்பதையே மறந்து வாழும் இத்திருநெல்வேலிச் சீமையில் பிறந்து வாழ்ந்து இக்கிறிஸ்தவத் தமிழராகிய ஆசிரியப் பெருமகனார் 'என்னை நன்றாய் இறைவன் படைத்தான், தன்னை நன்றாய்த் தமிழ் செய்வதற்கே' என்பதையுணர்ந்து இந்நூலை ஆக்கித் தந்தமைக்குத் தமிழுலகம் அவருக்குப் பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது எனக் கூறுவது மிகையாகாது. இதனை அச்சேற்றி உலகில் உலவவிட முன்வந்த ஆசிரியரின் அன்புமகன் திருவாளர் ஆர்தர் ஆசீர்வாதம் அவர்கள் ஒரு நல்ல காரியத்தைச் செய்தார் என்ற பாராட்டிற்குரியவர் ஆகிறார். இந்நூலுக்கு இவ்வறிமுகத்தைத் தருவதில் நான் மகிழ்ச்சியும் பெருமையுமடைகிறேன். |