நடத்திவந்தார்கள். தமது உடல் நலங் குன்றிய நிலையிலும் உக்கிரமன் கோட்டையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு அவர்கள் ஆற்றிய பணி அளவிடற்கரியது. இன்றும் அப்பகுதியிலுள்ள மக்கள் அன்னாரை நினைந்து நினைந்து மகிழ்கின்றனர். பாளையங்கோட்டை சமாதானபுரம் கிறித்து ஆலயத்திற்குக் கால்கோள் விழா எடுத்ததும் அவர்களே. அங்கு அவர்கள் பெயர் பொறித்த கல் அதனை நினைவூட்டி நிற்கின்றது. அச் சபையின் மக்கள் இன்றும் மறைதிரு ஆசீர்வாதம் அவர்கள் தங்கள் சமய, சமுதாய வாழ்வில் பங்கு கொண்டு அவ்வப்பொழுது கொடுத்துவந்த ஆலோசனைகளை நன்றியுடன் நினைந்து மகிழ்கிறார்கள். அக் கோவில் இன்றும் ஒரு சிறந்த கோவிலாக இயங்குவது குறிப்பிடத்தக்கது. ஐயரவர்களிடத்து நல்லாசான் தொடர்பும் - கவிதை நூற்படிப்பும் - மறைநூல் ஆய்வும் - பரம்பரை ஈவும் - இறைவன் அருளும் இணைந்து செயற்பட்டமையால் தம் ஒய்வு காலத்தில் இனிய எளிய கருத்துச் செறிவுமிக்க ஒரு காவியமாகத் 'திரு அவதாரத்தை' ஆக்கினார்கள். மீண்டும் தாமே அதனை ஒரு ழுறை அடித்தல் திருத்தல் இன்றி எழுதிச் சீரிய பெட்டகமாய் வைத்தருளி 1948-ஆம் ஆண்டு (13 - 7 - 1948) இறைவன் திருவடியை அடைந்தார்கள். அவர்களுக்கும், அவர்களுடைய இலட்சிய வாழ்விற்கும் உறுதுணையாக வாழ்ந்த மேரி ஞானம் அம்மையாருக்கும் இளைய மகனாகப் பிறந்த திரு. ஆர்தர் ஆசீர்வாதம் அவர்கள் தாம் ஓய்வு பெற்றுள்ள இவ்வமையம் தம் தந்தையாரின் உள்ளக் கருத்தினை நிறைவேற்றும் ஆர்வத்துடன் இந்நூலை வெளியிட முன்வந்திருப்பது பாராட்டுவதற்குரியதாம். தம் சீரிய தொண்டினால் அக்காலத்து ஆங்கில அரசாங்கத்தாரால் அளிக்கப்பட்ட "இராவ் சாகிப்" என்னும் பட்டம் பெற்ற மறைதிரு ஆசீர்வாதம் அவர்கள் தம்முடைய எழுத்துப் பணியால் 'திரு அவதாரத்' தை யாக்கி உலகிற்களித்து இரண்டாம் "கிறித்தவக் கம்பர்" என்னும் புகழ் பெறுகிறார்கள் என நினைக்கும்பொழுது உள்ளம் மகிழ்கிறது. வாழ்க அவர்கள் நாமம்! |