எல்லாம் வல்ல இறைவனை முதற்கண் வழுத்தி அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவருக்கே எல்லா மேன்மையும், மகிமையும் உண்டாவதாக! "திரு அவதாரம்" என்னும் இக்கவிதை நூலை இயற்றுவதற்குப் பரிசுத்த ஆவியினாலே எம் தந்தையை ஆட்கொண்ட கன்னிமகன் திருவருளைச் செப்பிட இயலாது. சுவிசேடங்களை மையமாகக் கொண்டு நூல் வடிவு சமைத்திட ஞானத்தையும், அறிவையும், தேக வலிமையும், உழைப்பையும், நற் சுகத்தையும் ஈந்த ஈசனை மீண்டும் போற்றிப் புகழ்ந்து என் நன்றியுரையைச் சமர்ப்பிக்கின்றேன். மறைந்து போக வேண்டிய இந்நூலைத் தக்க நேரத்தில் எனக்கு ஞாபகம் ஊட்டி, அதன் இருப்பிடம் இயம்பி, புதைபொருளாய்க் கண்டு கொள்ளச்செய்து தந்தையார் உளக்கிடக்கை நிறைவேற அச்சுப்பதிப்பில் வெளியிட என்னைத் தூண்டுவித்தமைக்கும், பாராட்டுரை எழுதியமைக்கும் மறைதிரு. D. கிறிஸ்டதாஸ் ஐயரவர்களுக்கு முதற்கண் நன்றி கூறக் கடப்பாடுடையேன். நம் திருமண்டலப் பேராயர் மகாகனம் S. டானியேல் ஆபிரகாம் அத்தியட்சர் அவர்கள் இந்நூல்வெளிவரத் தம் ஆசி கூறி, ஆதரவு அளித்து, "முகவுரை" எழுதி, எம்மைச் சிறப்பித்ததோடு; இந்நூல் நம் அத்தியட்சாதீன நூலங்காடியில் விற்பனை செய்ய ஆவன செய்தமைக்கும் கனிவுடன் கரங்கூப்பி நன்றியையும் வணக்கத்தையும் அன்னார்க்குச் சமர்ப்பிக்கின்றேன். முதிர் வயதில் தனிப்பட்ட முறையில் இப்பொறுப்புள்ள பிரசுரிக்கும் வேலையைச் செய்துமுடிக்க இயலாத என்னை ஊக்குவித்து, சமயோசித ஆலோசனையையும், ஒத்துழைப்பையும் கொடுத்துதவிய நண்பர் நற்போதக இணை ஆசிரியர் வித்துவான் R. S. ஜேக்கப் அவர்களுக்கும், நண்பர் வித்துவான் த. காசிப்பாண்டி அவர்களுக்கும், நன்றி கூற நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். வித்துவான் திரு. R. S. ஜேக்கப் அவர்கள் "அறிமுகம்" எழுதிப் பெருமை தந்தமைக்கும் உளமார நன்றி கூறுகின்றேன். வித்துவான் திரு. த. காசிப்பாண்டி அவர்கள் பாளை. சுந்தரம் அச்சகத்திற்கு வந்து, அச்சுப் பிரதிகளில் பிழை திருத்தி, இந்நூல் அச்சிடப்பட்டுச் சிறந்த முறையில் உருவாகுவதற்கு எடுத்துக்கொண்ட தன்னலமற்ற பணி வியக்கத் தக்கதே. மேலும் எம் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றினைக் கவனத் தாடும், அக்கறையோடும், எழுதித் தந்தமைக்காகவும் என் மனமார்ந்த நன்றியை அளிக்கின்றேன். |