இந்நூலின் அருமை, பெருமை வாசிப்போருக்கு விளங்கிடத்தக்க முறையில் உண்மையான அன்போடும், கடமை உணர்ச்சியோடும் இந்நூலைப் படித்து "அறிமுகம்" எழுதித்தந்த சாராள் டக்கர் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் குமரி L. R. ஜான் அவர்களுக்கும் எம் நன்றி. தாராவி நல் மேய்ப்பன் ஆலயக்குரு மறைதிரு ஜேம்ஸ்பால் அவர்கள் அங்குள்ள தமிழ் மக்களும் இப்பணியில் ஆர்வங்கொள்ள ஆவன செய்தமைக்கு அன்னாருக்கும் என் உளமார்ந்த நன்றி - வணக்கம். இலாபத்தைக் கருதாமல் இந்நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு உருவாக்கிக் கொடுத்த சுந்தரம் அச்சக உரிமையாளர் திரு. நடராஜன் அவர்களுக்கும், அவர்களுடைய பணியாளர்களுக்கும் எம் நன்றி என்றும் நிலைத்திருக்கும். அன்னாரின் அச்சகம் நாளும் வளர ஆண்டவன் அருள்புரிய வேண்டுகின்றேன். கையில் பணமில்லாது ஆரம்பித்த இப்பெரும் பணியை வெற்றிகரமாக முற்றுப்பெறப் பண உதவி, நன்கொடை முதலியன முழு மனதோடு அன்புடன் கொடுத்துதவிய நண்பர்கள், ஆதரவாளர்கள், இனஜன பந்துக்கள் குடும்பத்தினர் யாவர்க்கும் என் மனமார்ந்த நன்றியை அன்பு கலந்த வணக்கத்தோடு கூறிக் கொள்கின்றேன். இறைவனின் பேரருள் யாவர்க்கும் கனிந்து கிட்டிட இறைஞ்சி - இறைவன் நாமத்தால் யாவர்க்கும் நல்லாசி கூறி என் நன்றியுரையை முடிக்கின்றேன். |