பழைய பரணிநூல்கள்
பரணிநூல்களிற் கூறிய செய்திகள் சங்கமருவிய நூல்களிற்
காணப்படுதலாலும் தொல்காப்பிய உரையிற் பலஇடங்களிற் பரணி நூல் எடுத்துக்
காட்டப்படுதலாலும் இவ்வகைப் பிரபந்தமானது மிகப் பழைய காலந்தொட்டே தலைவர்களைச்
சிறப்பித்துப் பாடப்பெற்று வந்ததென்பது கொள்ளக்கிடக்கின்றது. பொருநர்களுள்
1 ‘பரணிபாடும்பொருநர்’ என ஒருவகையார் இருந்தனரென்று கூறப்படுவதனால்
இவ்வகைப் பிரபந்தத்தின் சிறப்பும், பழமையும், சிறப்பாக ஒருவகையார்
தனியே பயின்றுபாடும் பெருமையுடைய தென்பதும் புலப்படும். அங்ஙனம் பண்டைக்காலத்திற்
பாடப்பெற்ற பரணிநூல்களில் ஒன்றும் இப்பொழுது கிடைக்கவில்லை. முதற்
குலோத்துங்க சோழனைத் தலைவனாக உடையதும் செயங்கொண்டாரால் இயற்றப்பெற்றதுமாகிய
கலிங்கத்துப்பரணியே இப்பொழுது கிடைக்கும் பரணிகளுட்
பழமையும் தலைமையும் உடையதாகும். மூவருலாக்களில் வரும் 2சிலகண்ணிகளால்
குலோத்துங்கனுடைய முன்னோர்களாகிய சோழவரசர்களைச் சிறப்பிக்கும் பரணிநூல்கள்
சில வழங்கியிருத்தல் கூடுமென்று தோற்றுகின்றது. எவ்வகைப் பிரபந்தமும்
புலவர்களாற் பாடப்பெற்று வரவரச் செவ்விய அமைப்புற்றுத் திகழ்வது இயல்பு.
கலிங்கத்துப்பரணியின் செப்பத்தைப்பார்க்கும்பொழுது அது பலபுலவர்கள்பாடிய
பரணிகளிற் பயின்றதனால் உண்டான பயனென்றே எண்ணவேண்டி யிருக்கின்றது.
கலிங்கத்துப்பரணிக்குப் பின்பு அக்கலிங்கப் போர்ச்செய்தியையே
பாராட்டி முதற்குலோத்துங்கன் குமாரனாகிய விக்கிரமசோழனைப் பாட்டுடைத்
தலைவனாகக் கொண்டு கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் ஒருபரணி பாடியுள்ளார்
; 3’தென்றமிழ்த்
1. “பொருநரும் ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும் பரணி பாடுநருமெனப் பலராம்” தொல். புறத். சூ. 36, ந. 2. “கூடல, சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த, துங்கமத யானை துணித்தோனும்” (விக்கிரமசோழனுலா), “கொலையானை, பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி, கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன்-ஒப்பொருவர், பாட லரிய பரணி பகட்டணிவீழ், கூடல சங்கமத்துக் கொண்டகோன்” இராசராச சோழனுலா. 3. “செருத்தந் தரித்துக் கலிங்கரோடத்-தென்றமிழ்த் தெய்வப் பரணி கொண்டு, வருத்தந் தவிர்த்துல காண்டபிரான்-மைந்தர்க்கு மைந்தனை வாழ்த்தினவே” (தக்கயாகப்பரணி, 776); ‘இப்பரணிபாடினார் ஒட்டக்கூத்தரான கவிச்சக்கரவர்த்திகள். இப்பரணிப் பாட்டுண்டார் விக்கிரமசோழ தேவர்’ —. உரை |