முகப்பு தொடக்கம்
vi பாசவதைப் பரணி

தெய்வப்பரணி’ என்று அவராலேயே அது சிறப்பிக்கப்பெறுகிறது. அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. இவ்விரண்டும் அரசரைப் பாடியன. பின்னர், இரண்டாம் இராசராசசோழனைச் சார்த்து வகையாற் சிறப்பித்து, தக்கன் செய்தயாகத்தை வீரபத்திரர் அழித்த வெற்றியைப் பாராட்டித் தக்கயாகப்பரணி என்னும் ஒருநூல் அந்தக் கவிச்சக்கரவர்த்தியாலேயே பாடப்பெற்றது. இம் மூன்றும் தம்மை ஆதரித்த தலைவர்கள் பாலுள்ள செய்ந்நன்றியறிவு காரணமாகப் பாடப்பெற்றன.

பிற்காலத்தில், தத்தம் வழிபடு கடவுள் பாலுள்ள அன்பினாற் புலவர்கள் அவ்வத்தெய்வங்களின் மீது பிரபந்தங்களை இயற்றும் பொழுது பரணிப்பிரபந்தங்களையும் பாடினர்.கஞ்சவதைப்பரணி, இரணிய வதைப்பரணி, சூரன்வதைப்பரணி என்பன இவ்வகையைச் சார்ந்தவை. இவை பக்திகாரணமாக எழுந்தவை. சிவபெருமானை வேண்டிக்கொள்ளும் கருத்தமைந்த சில தாழிசைகளின் தொகுதி பரணியென்னும் பெயருடன் 1பலதலங்களில் திருவந்திக்காப்புக் காலத்தில் உரியவர்களால் தொன்றுதொட்டு ஓதப்பட்டு வருகின்றது. அவை மேற்கூறிய பிரபந்தங்களைச் சார்ந்தனவல்ல. வேறு சிலர் தம் ஞானாசிரியர்களைப் பாராட்டிப் பரணிகளை இயற்றினர். அவ்வகையில் அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப்பரணி என்பவை அடங்கும். இவை ஞானங்காரணமாக எழுந்தவை.

பரணிப்பிரபந்தம் ஏனைப்பிரபந்தங்களைப் போலப் பாட்டுடைத்தலைவன் பெயருடன் வழங்காமல் தோல்வியுற்றோருடைய பெயருடன் சார்ந்தே வழங்கும்.

பரணிக்குரிய யாப்பு

இப்பிரபந்தம் கலித்தாழிசைகளாற் பாடப்படவேண்டும். அம்மைமுதலிய வனப்பு எட்டனுள் இது விருந்தென்பதன் பாற்படும் ; புறத்திணைகளுள் பாடாண்திணையுள் அடங்கும். இதுமுழுவதும் தேவபாணி யென்பதும், இதன்கண் உள்ள தாழிசைகள் கொச்சக ஒருபோகின் வகையினவென்பதும் பின்வரும் தொல்காப்பிய உரைப் பகுதிகளால் விளங்கும் :


1. தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவரால் இயற்றப்பெற்ற ‘கலைசைச் சிதம்பரேசுவரர் பரணி’ முதலியன இவ்வகையைச் சார்ந்தவை. அப் பரணியிலுள்ள தாழிசைகளுள் ஒன்றுவருமாறு : “கவின்கைக் கமலங் குவித்து விழிக் காவி மலர்த்தி வழிபார்க்கும், அவள்பாற் கலைசைச் சிதம்பரநல் அழகரேவந் தருளுமினோ.”

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்