அப்பொழுது சிவஞானதேசிகருடைய பெருமையை அவனுக்கு ஞானவீரர்கள் எடுத்துக் கூறினார்கள் ; அதனைக்கேட்ட பாசன் மிகச் சீறி, “ஞானவிநோதன் என்முன்வந்தால் அப்பொழுது நான் காட்டும் வீரத்தைப் பாருங்கள்” என்று கூறினான். அச்சொற்களைச் செவியேற்ற ஞானவிநோதர் அவன்முன்பு வந்து அவன்தலையின்மீது தம் திருவடியை வைத்தனர். உடனே பாசன் தனது பழைய நிலைமாறி ஞானரூபம் பெற்றனன். அவனுடைய படைகளும் ஞான நிலையை அடைந்தன. அதனை அறிந்த யாவரும் ஞானவிநோதரைப் புகழ்ந்தனர். பின்பு ஞானவிநோதர் சிவஞானதேசிகர்பாற் சென்று பணிய, தேசிகர் அவருக்கு முடிசூட்டி, “ஞானசக்கரத்தை நீ செலுத்துவாயாக” என்று அருளினார். அவ்வாறே அவர் ஞான அரசாட்சியை நடத்திவந்தார் ; அவர் ஆட்சியில் யாவரும் இன்பத்தைப் பெற்று வாழ்ந்தனர். இப்பகுதியில் உண்மைஞானிகளுடைய இயல்புகளும் அறிவற்றவர்களுடைய இயல்புகளும் அங்கங்கே மிக அழகாகச் சொல்லப்படுகின்றன. காமன்முதலியவர்கள் கூற்றுக்களில் புராண இதிகாசங்களிலுள்ள செய்திகள் காணப்படுகின்றன. இருவகைப்படை வீரர்களுடைய கூற்றுக்களிலும், திருக்குறளிலுள்ள கருத்துக்களும் சொற்றொடர்களும் அமைந்திருக்கின்றன. இடையிடையே மடக்குக்கள் உள்ளன. கூளிகூறியதற்குப்பின்பு உள்ள களங்காட்டலென்னும் பகுதியில் தேவி மோகினிகளுடன் களஞ்சென்று அஞ்ஞானிகள் ஞானம் பெற்ற வரலாற்றைக்கூறி அவர்களைக்காட்டுதல் சொல்லப்படுகிறது. கூழென்னும் பகுதியில் சாந்திமுதலிய மோகினிகள் கூழ் சமைத்துத் தேவிக்குப்படைத்துத் தாமும் உண்டு, அங்கே உணவு பெற வந்திருக்கும் பலபேய்களுக்கு இடுதலும் அவை உண்டு ஞானவிநோதரையும் பிறரையும் வாழ்த்துதலும் காணப்படும். பல சமயத்தினர் கொள்கைகள் இப்பகுதியால் தெரியவருகின்றன. இந்நூலமைப்பு, அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி, தமிழ்ப்பிரபோதசந்திரோதயம் என்பவற்றைப் பின்பற்றியதாகக் காணப்படுகின்றது. அவற்றுள்ளும் அஞ்ஞவதைப்பரணியிலுள்ள |