சொல்லும் பொருளும் பெரும்பாலும் அப்படி அப்படியே இதில் எடுத்தாளப்பட்டுள்ளன. இவற்றை நோக்கும்பொழுது, “முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும் பொன்னேபோற் போற்றுவம் என்பதற்கும்-முன்னோரின் வேறுநூல் செய்துமெனும் மேற்கோளில் என்பதற்கும் கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்”
என்னும் பழைய இலக்கணத்தை மேற்கொண்டவர்களில் இந்நூலாசிரியரினும் சிறந்தவர் வேறொருவரிரா ரென்று தோற்றுகிறது. இந்நூலாசிரியர் இலக்கணவிளக்கம் இயற்றியவரும்திருவாரூரில் திருக்கூட்டத்தில் தமிழுக்கு இலக்காய் விளங்கியவருமான ஸ்ரீ வைத்தியநாத தேசிகரென்றும் இதனை இயற்றியதற்காக அவர் சில மானியங்களைப் பெற்றனரென்றும் கூறுவர். இந்த விவரம் எனக்குக் கிடைத்த கையெழுத்துப் பிரதிகளாலும் வேறு வகையாலும் தெரியாமையால் இதைப்பற்றி நான் ஒன்றும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. இந்நூலில் உள்ள சுவையுள்ள பகுதிகள் வருமாறு : தாழிசை, 3-16, 81-5, 108-138, 163, 183-200, 255, 282-95, 346-447, 469, 475-540, 571-89, 629-37, 642-52, 657-63, 670-76.. இற்றைக்குச்சற்றேறக்குறைய முப்பது வருஷங்களுக்குமுன்பு இந்நூலெழுதிய ஏட்டுச்சுவடி ஒன்று திரிசிரபுரத்தில் தென்னிந்திய ரெயில்வேயில் பெரிய உத்தியோகத்திலிருந்த ஸ்ரீமான் காஞ்சீபுரம் கங்காதர முதலியாரவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்தது. அப்பிரதியின் இறுதியில் பின்வருவன எழுதப்பட்டிருந்தன : ‘நன்றாக, குருவாழ்க, குருவேதுணை. சிவஞான தேசிகனார் திருவடிகளே சரணம். வெற்றிவேலுற்றதுணை. திருச்சிற்றம்பலம். சாலிவாகன சகாப்தம் (1744)-க்குமேலே செல்லா நின்ற சுபானுu பங்குனிt 32 ஆதிவாரம் சதுர்த்தசி திதி பதினெட்டரை, பூரநட்சத்திரம் 43 ; இந்த சுபதினத்தில் சற்குரு சிவலிங்கதேசிகேந்திர சுவாமி யாருடைய கிருபாகடாக்ஷத்தினாலே காஞ்சீபுரம் பிள்ளைபாளையம் கிருஷ்ணாராயர் தெருவிலிருக்கும் குருசாந்தையர் மடம் ஏகாம்பர அய்யர் பேரனாகிய அண்ணாமலை பாசவதைப்பரணி எழுதி நிறைவேறினது முற்றும். அண்ணாமலை சொஸ்தலிகிதம், சிவமயம்.’ |