அணிந்துரை
நாணையும் இழந்து நடுக்கங்
கொள்கின்றாள்; அவள், உண்டல் உறங்கல்களையும்
மறந்தாள்; சொல் நலங் கனிந்த காமச் சுவையை ஓர்
உருவமாக்கி இன்னலந் தெரியவல்லார் எழுதிய ஓவியம்
போல் தன்னையும் துறந்து மறந்து நிற்கின்றாள். இத்தகையாள்
தளர்வுற்ற நிலைக்கு - வாடிய தன்மைக்கு - ஓர் ஒப்புக்
கண்டுரைக்கின்றார் ஆசிரியர். இளந்தளிர் மென்மையது;
அது ஞாயிற்றின் ஒளிகண்டாலே வாடும் தன்மையது; அக்கதிர்கள்
தன் மேற்படின், தளர்ந்து சாம்பி வாடி வதங்கும்
இயல்பினது; இத்தகை மெல்லிய தளிரை
நெருப்பிலிடின் எத்தன்மைத்தாம்? தன் உருச்சிதைந்து
அதன் மாணிறமும் குன்றிக் கருகுமன்றோ? அது போல்
தமயந்தி, உடாது உண்ணாது தளர்ந்து தன் இயற்கையழகு
குன்றி நின்ற நிலைக்கு வினையுவமமாகக் கொண்டு,
‘நெடுங்கண் வெள்ளம்போய் வேகின்ற
மென்தளிர்போல்
.............உள்ளரிக்கச் சோர்ந்தாள்
உயிர்,’ (சுயம் : 15)
என்று, சித்திரித்துக் காட்டிய உவமம்,
நெஞ்சை அள்ளும் நீர்மையதாக மிளிர்தலை உணர்க.
பின்னும் மற்றோரிடத்தில் தமயந்தி
ஓர் சோலையிடத்தே நளனுடன் ஊடல்
கொள்கின்றாள். அப்போது, ‘சோலை இத் தன்மையதோ?’
என, நளனிடம் வினவ எழுந்தபோது அவளது சிறுசினத்தால்
விரைந்து நன்கு விளக்கிச் சொல்ல நாவெழவில்லை;
அதைத் தடுமாறித் தடுமாறித் தன் மழலைச்சொற்களால்
சொல்கின்றாள்: அச் சொல் நன்கு வெளிப்பட்டுத்
தோன்றிற்றில்லை; சொல்வது தெரிகின்றதே தவிர,
சொல்வது இன்னதென நன்கு புலனாகவில்லை. இதற்குப்
புகழேந்தியார் அமைத்துக் காட்டும் வினையுவமம் வியப்பும்
மகிழ்வும் ஊட்டும் மேன்மையது.
அழகும் மென்மையும் இளமையும் மிக்க மங்கைப்
பருவம் அடைந்த கன்னிப்பெண்கள், தம் அன்னையர்
காவலில் அமைந்து அடங்கிக் கிடப்பர்; ஆனால்
பருவத்துக்கேற்ற காதலுணர்வு தோன்றாமல் இராது.
அவர்கள் பூப்பெய்திக் கன்னிமாடத் துறைபவராவர்.
அவர்தம் மனத்தெழுந்த காதல் வேட்கையை அடக்கவும்
இயலவில்லை; வெளிக் கொணரவும் முடியவில்லை; அவர்
மனத்தே தோன்றியும் தோன்றாத நிலையில் - அடக்கியும்
அடக்கவொண்ணாத நிலையில் நின்று - தத்தளிப்பை
அவர்கட்குத் தருவது இயற்கை. இந் நிலையைத் தமயந்தி
கூறப்போந்த சொற்கட்கு வினையுவமமாகப் பொருந்தி,
‘கன்னியர்தம் வேட்கையே போலும்
களிமழலை
தன்மணிவாய் உள்ளே தடுமாற’ (கலிதொடர்:
21)
|