பதிப்புரை
நளவெண்பா எனப் பெயரிய
இந்நூல் முத்தமிழ்ப் புலமை வாய்ந்த நல்லிசைப்
புலமை வல்லுநர் புகழேந்திப் புலவரால் ஆக்கப்பட்டுத்
தமிழ்மொழிக்கு அணியாக இலகுவது.
இந்நூல் சொற்பொருள் அணியும் ஆழமும்
மிக்கது; கற்கக் கற்கக் கழிபேரின்பம் தருவது; எண்வகைச்
சுவையும், காப்பியச் சிறப்பும் கவினுறத் திகழ்வது,
இத்தகைய சிறப்புமிக்க இந்நூலுக்குப்
பன்னெடுங் காலமாகப் பலப்பல உரைகள் வெளிப்போந்துள்ளன.
ஆயினும், அவைகள் மறுமறுபதிப்பு வாராது நாட்டில்
அருகலாயிற்று.
எனவே, இக்குறைபாட்டை நன்குணர்ந்து இந்நூற்குப்
புத்தகம் புதிய முறையில் சொல்லுரை, கருத்துரை, இலக்கணக்குறிப்பு,
மேற்கோள் முதலிய யாவும் கெழுமிய விளக்கவுரையை
எம் கழகப் புலவர், செல்லூர்க்கிழார், திரு.
செ. ரெ. இராமசாமிபிள்ளை யவர்களைக் கொண்டு எழுதுவித்து,
அழகிய முறையில் பதித்து வெளியிட்டுள்ளோம்.
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பகமாகிய
நம் தமிழக மக்கள் யாவரும், வாங்கிக் கற்றும் கற்பித்தும்
இலக்கியச் சுவைஞர்களாக இலகுவதுடன், எம்மையும்
இதுபோன்ற இத்தமிழ்ப் பெரும்பணியில் மேன்மேலும்
ஊக்குவிப்பார்களென நம்புகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
|