அணிந்துரை

இயற்கை இன்பம் :

காலை ஞாயிறும் மாலை மதியமும், காலை வெள்ளொளியும் மாலைச் செவ்வொளியும், வானின் முத்துப் போன்ற விண்மீன் ஈட்டமும், கடலின் கருநிறமும், மாலையின் மாண்பெருந் தோற்றமும், காட்டின் செறிவும், மலர்களின் கூட்டமும் கட்புலன்கட்குப் பெருவிருந்தாவன; வண்டின் முரற்சியும், கடலின் இரைச்சலும், வானம்பாடியின் மகிழ்வுறு பாடலும், புட்கூட்டங்களின் பேரொலியும், தவளைகளின் தத்துறுபாடலும், மழைபெய் மாணொலியும் செவிப்புலன்கட்கு இரையின்பம் செய்வன; வீசுதென்றலும், வீங்கிள வேனிலும், நிலவின் தண்ணொளியும், நீரின் குளிர்வும், ஞாயிற்றின் வெப்பமும் உடலுக்கு ஊற்றின்பம் தருவன; வெண்மை செம்மை பொன்மை கருமை பசுமை முதலிய பன்னிற மலர்களின் நன்மணமும், மரஞ் செடி கொடிகளின் நறுவிய பல்வகை மணங்களும் மூக்குப் புலனுக்கு முற்றா இன்பம் பயப்பன ; நறுவிய மா பலா வாழைத் தீங்கனிகள், நரந்தம்
கிச்சிலி முதலியவைகளின் கனிகள், நாப்புலனுக்கு நல்விருந் தாக்குவன. இவைகளை இயற்கை படைத்துத் தந்து கண்ணின்பமும், காதின்பமும், ஊற்றின்பமும், முகர்வின்பமும், சுவையின்பமும் நாம் ஒருங்கே பெற்று நல்வாழ்வு வாழத் துணைபுரிகின்றது.

இயற்கை தந்த செல்வங்களை யெல்லாம், நாம் ஒரு சேரக் கண்டு களித்தற்கு நம் கண் முதலிய உறுப்புக்கள் துணைபுரிகின்றன. இவ் வியற்கைப் பொருள்களன்றோ நாம் உயிர்வாழ உணவும், நீரும், காற்றும் முதலியன தந்து பேருதவியாக அமைந்துள்ளன. கைம்மாறு கருதாது ஆற்றும் கடப்பாடுடைய இயற்கைப் பொருள்களின் நன்றிக்கு யாம் யாது கைம்மா றாற்ற வல்லேம்!

காலைக் கதிரவன் தோன்றிப் பகல் செய்து நாம் தொழின் முறையாற்றத் துணைபுரிகின்றான் ; மாலையில் திங்கட் செல்வன் தோன்றி இருள் கடிந்து, தன் தண்ணிளங் கதிரால் அயர்வகற்றி இன்பம் செய்து நம்மைத் துயிற்றுகின்றான் ; வேனில் வருகின்றது ; செலவு பெறுகின்றது ; குளிர் போதருகின்றது ; செல்கின்றது ; இவ்வாறு பருவங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி மறைகின்றன. ஆ! இவ்வியத்தகு தோற்ற மறைவுகள், மாந்தர்களாகிய நமக்கும் ஏனைய உயிர்வகைகட்கும் எவ்வளவு துணையாக - நலனாக - இலகுகின்றன! அறிந்து உணர்மின்!