நளவெண்பா

வேனிற் காலமாகவே இருப்பின், நம் உடல் வெப்பமாகி நம்மைப் பெருஞ் சூட்டுக்குள்ளாக்கி வருத்துதலும், அன்றிக் குளிர் காலமாகவே இருப்பின் வாடைக்காற்றும் குளிர்பனியும் நம் உடலை நடுக்கிக் கைகால்கள் வலிப்பச் செய்தலும் காண்டுமன்றோ? எனவே, இந்நிலை, நிலை பெற்று நிற்கா வண்ணம், உலகுயிர்களைக் காத்தற் பொருட்டு எல்லாம்வல்ல இயற்கையாகிய இறைவன் எல்லாப் பொருள்களையும் ஒரே நிலையில் நிறுத்தாது மாற்றஞ் செய்து வருவானாயினான். இதனை மணிமொழிப் பெருமான்,

‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
......கொட்கப் பெயர்க்கும் குழகன்’

என்று உண்மை நிலையை உணர்த்தியருள்வா ராயினார்,

இவ் வியத்தகு காட்சிகளை நாம் நாள்தோறும் காண்கின்றோம்; கேட்கின்றோம்; முகர்கின்றோம்; சுவைக்கின்றோம்; உற்றறிகின்றோம்; ஆனால், அவ்வுணர்வுகள் நிகழ்ந்தவுடன், அவ்வப்போதே நிலைக்கொள்ளாது மறைவுறுகின்றன.

நாம் ஓர் இசையரங்கிற்குச் சென்று ஏழிசை இன்பப் பாடல்களைச் செவி கருவியாகக் கேட்போமானால், கேட்ட அவ்வின்பம் அற்றைப் பொழுதிலேயே அவ்வரங்கை விட்டு வெளிவந்தவுடன் மறைகின்றது. மலையிடஞ் சென்று அதிலிருந்து இழுமென் ஒலியுடன் கீழிறங்கி வரும் அருவிக்காட்சிகளையும், அதிலுள்ள தெங்கு சந்தனம் அகில் மா பலா வாழை முதலிய மரங்களையும் செடி கொடி முதலியவற்றையும் கண்டு களித்து வருவோமாயின், நாம் திரும்பி இல்லஞ் சேர்ந்தவுடன் அவை நம் மனத்தில் நிலைக் கொள்ளாது மறைகின்றன. இவ்வாறு கேட்பன காண்பன யாவும் நிலைபெறாது மறைதல், என்றும் எல்லோரிடமும் நிகழும் இயற்கைத் தன்மையாகும்.

இலக்கிய மாண்பு:

இக்காட்சிகளை - உலக நிகழ்ச்சிகளை - என்றும் மறையாது - மறவாது - நிலைபெறுத்துவனவே இலக்கிய வான்பெருஞ் செல்வங்கள். இவைகளை நம் தமிழ்ப் பெருமக்கள் பண்டுதொட்டே நன்கு கூர்த்தறிந்து அவ்வறிவின் மதுகையால் அவைகளைப் பாக்களென்னும் பெரும் பேழையுள் திரட்டிப் பொதிந்து வைத்துச் செல்வாராயினர். அவைகளே இன்று உலகில் வரலாற்று நூல்