மதிப்பெண் வாங்கிய பள்ளி இறுதி மாணவர்களுக்குச் சாதி
மதபேதமின்றி உதவித்தொகை கொடுத்து வரும் கவிமணியின்
குடும்பத்தார் நடத்திய அந்தத் தனி விழாவில் குமரிமாவட்டமுதன்மை
நீதிபதியாக இருந்த திரு.சி.சொக்கலிங்கம் அவர்கள் தலைமை
தாங்கினார்; டாக்டர் தெ.ந.மகாலிங்கம், கு.பச்சைமால் ஆகியோர்
பேசினர். மிகக் குறைந்த அளவே பார்வையாளர்கள் இருந்த
அந்தக் கூட்டத்தில் டாக்டர் தெ.ந.மகாலிங்கம் கவிமணியின் கவிதைகள் ஒரே
தொகுதியாக
வரவேண்டிய அவசியத்தை நிதானமாகவே
வற்புறுத்தினார். ஒரு கவிஞன் மறைந்து ஐம்பது ஆண்டுகள் கடந்த
பின்னும் இது நடக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டார்.
“நீங்கள்
இருவருமே அதைச் செய்ய வேண்டும்” என்று எங்களை நோக்கிக்
கட்டளை இட்டார்.
பாரம்பரியம் மிக்க கவிஞன் - ஒன்றேகால் நூற்றாண்டைக்
கடந்த ஒரு படைப்பாளியின் கவிதைகளை ஒருசேர வெளியிடும்
முயற்சியை ஒரு பல்கலைக்கழகமோ கல்வி நிறுவனமோ அல்லவா
செய்ய வேண்டும் என்று நினைத்து நாங்கள் சோர்ந்து போயிருந்தோம்.
அப்போது எங்களுக்கு ஊக்கம் கொடுத்த டாக்டர் தே.வேலப்பன்
அவர்கள், இது குறித்த முதல் சந்திப்பிலேயே ஒரே தொகுதித்
திட்டத்தை வரையறை செய்யச் சொன்னார்.
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் வெளியிட்ட பாரதியின்
பாடல்கள் ஆய்வுப் பதிப்பை (1987) முன் மாதிரியாக வைத்துக்
கொண்டுதான் நாங்கள் பதிப்பு வேலையை
ஆரம்பித்தோம்.
கவிமணியின் கவிதைகள் எல்லாமே மலரும் மாலையும்,
மருமக்கள் வழி மான்மியம், ஆசியஜோதி, உமர்கய்யாம் பாடல்கள்,
குழந்தைச் செல்வம், தேவியின்
கீர்த்தனங்கள் என்னும் ஆறு
தலைப்புகளில் நூல் வடிவில் வந்துள்ளன. இவற்றில் குழந்தைச்
செல்வம் நூலின் பாடல்கள் பின்னர் மலரும் மாலையும் தொகுதியில்
சேர்க்கப்பட்டன. காதல் பிறந்த கதை எனத் தனித் தொகுதியாகத்
தோன்றிய சிறுநூல் பின் வேறு பாடல்களுடன் ஆசியஜோதி என்னும்
தலைப்பில் வந்தது.
கவிமணியின் கவிதைகளை முதலில் அச்சிட்டு நூலாக ஆக்கியவர்
ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணிய பிள்ளைதாம். இவர்பாடப்
புத்தகங்களையும் பாரதி நூற்களையும் வெளியிட்டார். இவர்
கவிமணியின் பாடல்களைக் கிடைத்த அளவுக்குத் தொகுத்துத்
தனித்தாளில் அச்சிட்டு நூலாக்கிச் சாதாரண அட்டையுடன்
வெளியிட்டார். வையாபுரிப்பிள்ளை, டி.கே.சி.யின் நண்பர் என்ற
முறையில் இவர் இவ்வாறு செய்ய நேர்ந்திருக்கிறது. இதை நூல்
வடிவான தொகுப்பு எனக் கூற முடியாது. பெரும்பாலும் இத்தொகுப்பு
இலவசமாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது.
|