எப்பொழுது திரும்புவாயோ?

காதலன் நெல் அறுத்துக் கொண்டிருக்கிறான். காதலி அவனைத் தாண்டி வேறு வயலுக்கு அறுவடைக்குச் செல்லுகிறாள். அறுவடை முடிந்ததும் அவளை எங்கே எப்பொழுது பார்க்கலாம் என்று அவன் கேட்கிறான்.

கட்டுக் கொடிப் பள்ளத்திலே
கஞ்சிக் கொண்டு போறவளே
கஞ்சு அலும்பு தோடி
கன்னி மோகம் வளருதோடி
பச்சை வளையலிட்டுப்
பயிரறுக்கப் போறவளே-உன்
பச்சை வளையல் மின்னல்
பயிரு வழி சோருதடி
நீல வளையலிட்டு-என் அமுதம்
நெல்லறுக்கப் போறவளே-உன்
நீலவளையல் மின்ன
நெல்லறுப்புச் சோருதடி
நெல்லறுப்பு அறுத்துவிட்டு-என் கண்ணே
எப்ப திரும்பு வையோ?-நான்
ஏங்கிக் கிடக்கறண்டி

வட்டார வழக்கு: அலும்பு-அலம்புதல், ததும்புதல்.

சேகரித்தவர் :
சடையப்பன்

இடம் :
அரூர்,
தருமபுரி மாவட்டம்.