வண்டிக்காரன்

அவன் வண்டி வைத்திருக்கும் சிறு பணக்காரரிடம் வண்டியோட்டுகிறான். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாரம் ஏற்றி அனுப்புகிறார்கள். ஒரு நாள் பாக்கு ஏற்றி அனுப்புகிறார்கள். மற்றொரு நாள் புகையிலை. இவ்வாறு பல பல பொருள்களை, வண்டியில் பாரமேற்றிப் பல ஊர்களுக்கு அனுப்புகிறார்கள். அவை விலையாகின்றன. பணமும் அவன் கையில் கொடுக்கிறார்கள். ஆனால் அந்தப் பணம் அவனுக்கு சொந்தமா? இல்லையே. அவனுக்குக் கூலி மட்டும்தானே மிஞ்சும். அக்கூலி அவன் வயிற்றுக்கே பற்றாது. காதலிக்கு வாயாலாவது தங்க நகை செய்துபோட்டு மகிழ்கிறான் வண்டிக்காரன். அவளுக்கும் தெரியும். ஆனால் அன்பு மிகுதியால் ஏற்பட்ட ஆசையை அவன் வெளியிடும்போது அவளுக்குப் பெருமையுண்டாகிறது. அவன் நகைகளைச் செய்து தனக்கு அணிவித்தது போன்ற மனநிறைவு பெறுகிறாள்.

தெற்குச் சாயல் வண்டி ஏறலையா-என்
சின்னப் பெண்ணே கண்ணே கோகிலமே
தெற்குச் சாயல் வண்டி ஏறலியோ?
பட்டணம் டவுனாம்
பாக்குக் கடை வியாபாரமாம்
பாக்கு விலையானால்
பதக்கம் செய்து போடுறண்டி
போளூரு டவுனாம்
பொகலை வியாபாரமாம்
பொகலை விலையுமானால்
பொகிடி செய்து போடுறண்டி
மஞ்சாக்குப்பம் டவுனாம்
மஞ்சாக் கடை வியாபாரமாம்
மஞ்சா விலையுமானால்
மாட்டல் செய்து போடுறண்டி
அரக்கோணம் டவுனாம்
அரிசிக்கடை வியாபாரமாம்
அரிசி விலையுமானால்
அட்டிகை செய்து போடுறண்டி
காஞ்சிபுரம் டவுனாம்
கத்திரிக்காய் வியாபாரமாம்
கத்திரிக்காய் விலையுமானால்
கம்மல் செய்து போடுறண்டி
கோவிலூரு டவுனாம்
கோழிக்கடை வியாபாரமாம்
கோழி விலையுமானால்
கொப்புச் செய்து போடுறண்டி
பாசிலூரு டவுனாம்
பாலுக்கடை வியாபாரமாம்
பாலு விலையுமானால்
பீலி செய்து போடுறண்டி

வட்டார வழக்கு: பொகலை-புகையிலை; பொகிடி-ஒரு அணி; மஞ்சா-மஞ்சள்.

சேகரித்தவர் :
சடையப்பன்

இடம் :
அரூர்.