ஓடிட்டாலும் குத்தமில்லை !

காதலன் அவசரக்காரன். அவனுடைய திடீர் நடவடிக்கைகளால் காதலர் உறவு வெளிப்பட்டு விடுகிறது. அவள் அடிக்கடி வெளியே வர முடியவில்லை. வந்தாலும் யாரையாவது கூட அனுப்பி வைக்கிறார்கள். அவன் அதற்குப் பிறகும் அவளை மணந்து கொள்ளும் வழியை நாடாமல் கதவைத் தட்டுவதும், கல்லெறிவதுமாக அலைகிறான். அவள் ஓடிப்போகலாம். அதற்காவது தைரியமுண்டா? என்று அவனைக் கேட்கிறாள்.

சோளபுரத்திலேயோ-இரண்டு
ஜோடிப் புறா தான் வளர
அருகிலுள்ள மாடப் புறா-இப்போது
ஆளைக் கண்டு கூவுதடி
ஒருத்திக்கு ஒரு மகன்டி
உன்னை நம்பி வந்தவன்டி
கைதவற விட்டியானால்
கடுமோசம் வந்திடுமே
வெள்ளி நிலா வடிக்க
வீட்டுக்குள்ளே நான் படுக்க
தள்ளிக் கதவடைக்கச்
சம்மதமா உன் மனசு?
கல்லால் எறிஞ்சு பாத்தேன்
கதவையும் தட்டிப் பாத்தேன்
உறக்கம் பெரியதுன்னு
உறவை மறந்திட்டியே

பெண்: நீ கருப்பு நான் சிவப்பு
ஊரெங்கும் ஓமலிப்பு
ஓமலிப்புப் பொறுக்காமல்
ஓடிட்டாலும் குத்தமில்லை

 

வட்டார வழக்கு: ஓமலிப்பு-ஊர்வம்பு.

சேகரித்தவர் :
M.P.M. ராஜவேலு

இடம் :
மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டாரம்,
நெல்லை மாவட்டம்.