|
கன்னிக் களவு
காதலன் ரோட்டுக்கூலி. அவன் போட்ட ரோட்டு வழியே அவள் செல்லுகிறாள்.
அவன் ரோட்டோரம் மறைந்திருக்கிறான். அவள்
அவனைக் காணவே வந்திருந்ததால், அவனைக் கடந்து
அவள் சென்றதும் அவன் பாடுகிறான்;
அவனுடைய பாடல் கேட்டு அவள் மகிழ்ச்சியோடு திரும்புகிறாள். அவனுடைய
பேச்சில் மனம் பறிகொடுத்து அவள் அவன் உறவில்
மகிழ்ச்சி கொள்ளுகிறாள்.
|
ஆண்:
|
நான்
போட்ட ரோட்டு வழி
நாணயமா போற குட்டி
கல் முனை
தட்டிராதா?
கல் மனசு
இளகிராதா?
நீல வளையக் காரி
நித்தம் ஒரு
பொட்டுக்காரி
தோளு
வலயக்காரி
தொடுத்திடுவாய்
மல்லிகைப் பூ.
வாழை
வடக்கே வச்சேன்
வாழ்
கரும்பைத் தெக்கே வச்சேன்
ஊரைக்
கிழக்க வச்சேன்
வருகிறேண்டி
உன்னாலே
பட்டமரம்
பட்டணம்தான்
பறந்தமரம்
தூத்துக்குடி
குளுந்த தேசம்
நம்ம ஊரு
கூடிடுவோம்
ரெண்டுபேரும்
ஆசை கிடக்குதடி
ஆத்துக்கு
அக்கரையில்
சீவன்
கிடக்குதடி
சிந்து பொடி
வாசலிலே
வெள்ளி
நிலாவே
விடியக்காலப் பெருநிலாவே
கள்ளி
களவாண
கண் மறைய
மாட்டாயோ?
உள்ளூரு
ரத்தினமே
உல்லாசத்
தங்கமே
என்னை
விட்டுப் பிரிந்தாயானால்
இட்டிடுவேன் கை
விலங்கு
சாயச் சருக்குச் சேலை
சாத்தனூருக் கம்பிச் சேலை
ஊதாக் கருப்புச் சேலை
உருக்குதடி என் மனசை
கத்தாழைப் பள்ளத்திலே
கண்ணெருமை மேய்க்கையிலே
அன்று சொன்ன வார்த்தை யெல்லாம்
அழிக்காதே பெண் மயிலே.
மஞ்சள் அழிந்திடாமே-உன்
மாறாப்பு மசங்கிடாமே
கொண்டை உலஞ்சிடாமே
கொண்ட பூ வாடிடாமே
|
|
பெண்:
|
மஞ்சள்
அழிஞ்சிடுமே
மாறாப்பு
மசங்கிடுமே
கொண்டை
உலஞ்சிடுமே
கொண்டவன்
கையினாலே
வாசமுள்ள ரோஜாவே
வாடா மரிக்கொழுந்தே
தேசமதில் உங்களைப் போல
தேடினாலும் கிட்டுமோ? |
வட்டார வழக்கு:
சிந்து பொடி-செந்தூரம்; வலயம்-ஆபரணம்;
களவாண-களவாட.
|
சேகரித்தவர்:
M.P.M. ராஜவேலு |
இடம்:
தூத்துக்குடி
வட்டாரம்,
நெல்லை மாவட்டம். |
|