பக்கம் எண்: - 106 -

வாழ்விலும் இடம் இல்லை; பாடல்களிலும் இடம் இல்லை. அவர் பிராமண குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தும், தம் பாடல்களுக்கு யாழ் இசைப்பதற்காகத் தீண்டாக் குடும்பத்தைச் சார்ந்த திருநீலகண்டர் என்பவரைத் தம்முடன் தலங்களுக்கு அழைத்துச் சென்றார். பிராமணர்களின் தெருக்களுக்கும் வீடுகளுக்கும் அழைத்துச் சென்றார். அந்தத் தீண்டாதவர் உள்ளே வருவதனால், பிராமணர் வளர்க்கும் வேள்வித் தீ அவிந்து குற்றம் ஏற்படுமோ என்று பலர் அஞ்சியபோது அஞ்சாமல் அந்த வேள்வித் தீயின் அருகே அவரை அழைத்துச்சென்று, தீ முன்னிலும் நன்றாகச் சுடர் விட்டு ஒளிர்வதை மற்றவர்கள் காணச் செய்தாராம். யான் உரைப்பன சிவன் உரையே என்பார். ஆணை நமதே என்று உறுதி ஊட்டுவார். இவ்வாறே அவருடைய வாழ்வினிலும் பாடல்களிலும் அஞ்சாமையும் தெளிவும் ஆர்வமும் நம்பிக்கையும் நிரம்பியிருந்தன. அவற்றை உணர்ந்த பிற்காலச் சான்றோர் சிலர், அவருடைய பிறப்பு மற்றவர்களைப் போன்ற எளிய மனிதப்பிறவி அல்ல என்று வியந்து, அவரை முருகனுடைய அவதாரம் என்று போற்றிப் பாடியுள்ளனர்.

அவர் பாடிய பாடல்கள் ஒரு லட்சத்து அறுபதினாயிரம் என்று கூறப்படும். ஆனால் இப்போது கிடைக்கும் பாடல்கள் 4168 ஆகும். எல்லாம் இசையோடு பாடுவதற்கு ஏற்றவாறு பண் வகுக்கப்பட்டவை; அவர் காலத்திலேயே அவராலும் அவரைச் சூழ்ந்து தலங்களுக்குச் சென்ற மற்றவர்களாலும் இசையோடு பாடப்பட்டவை. அவற்றுள் சில பாடல்கள், யமகம் மடக்கு முதலான சொல்லணிகள் அமைந்தவை.

ஆதிசங்கரர் தென் இந்தியர் ஆகையால், திருஞானசம்பந்தரைப்பற்றி நன்கு அறிந்து அவரைப்பற்றி ஓர் இடத்தில் ‘திராவிட சிசு’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே, திருஞானசம்பந்தர் அக்காலத்தவரால் ஒரு குழந்தைஞானியாக உணர்ந்து போற்றப்பட்டார் என்பது தெரிகிறது. வடமொழியில் பக்திசூத்திரத்தில் ‘கவுண்டின்ய’ என்ற ஒருவரே பக்தி இயக்கத்தின் மூலமாக விளங்கிய தலைவர் எனக் குறிப்பிடப்படுகிறார். திருஞானசம்பந்தர் கவுணியர் என்று குறிக்கப்படுவதால், அவரையே அந்தப் பெருமை சாரும் என்பது அறிஞர் கருத்து.

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர் வடமொழியும் தமிழும் நன்று கற்றுத் தேர்ந்தவர். சைன சமய நூல்களில் புலமை மிகுந்தவராய், சைனத் துறவிகளிடையே தலைமையும் பெற்று விளங்கியவர். பிறந்த குடும்பம் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டது. தமக்கை கோயில் தொண்டில் ஆர்வம் நிரம்பியவர். அவருடைய அன்பினால் இழுக்கப்பட்டு மறுபடியும் சைவ சமயத்திற்கே