பக்கம் எண்: - 107 -

வந்து நெடுங்காலம் வாழ்ந்து தலங்கள் பலவற்றிற்கும் சென்று பக்திப் பாடல்கள் பாடினார். அவர் பாடியவற்றுள் ஒரு பகுதி தாளத்துடன் கூடிய இசையோடு அமைந்த பாடல்கள். மற்றொரு பகுதி தாளம் இல்லாமல் இசையமைத்துப் பாடப்படுபவை. அவைத் திருத்தாண்டகம் என்னும் செய்யுள்வகையால் அமைந்தவை. அந்தத் தாண்டகப் பாடல்களை ஆழ்வார்களுள் ஒருவரும் பாடியுள்ளார். திருநாவுக்கரசர் அந்தப் பாடல்களைப் பாடுவதில் சிறந்து விளங்கிய காரணத்தால், ‘தாண்டக வேந்தர்’ என்று போற்றப்பட்டார். அந்தப் பாடல்களின் இசை மிக நெகிழ்வித்து நெஞ்சை உருக்குவதாகும்.

அவர்க்கு ஒரு சமயம், பகைகொண்ட அரசன் வருமாறு ஆணை அனுப்பினான். அப்போது அவர் பாடிய பாடல் அவருடைய பெருமித உணர்ச்சியையும் சிவபக்தியையும் ஒருங்கே புலப்படுத்துகிறது. “யாம் யார்க்கும் குடியாக அடங்கி வாழவில்லை. எமனுக்கும் அஞ்சுவதில்லை. நரகத்தில் சென்று இடர்ப்படுவதில்லை. பொய்ம்மை எம் வாழ்வில் இல்லை. மகிழ்ச்சியாக வாழ்வோம். நோய் அறியோம். யார்க்கும் பணிய மாட்டோம். எந்த நாளும் இன்பமே அல்லாமல் துன்பம் இல்லை. எம் கடவுளாகிய சிவபெருமான் யார்க்கும் குடி அல்லாத தனித்தலைமை உடையவர். அவர் ஒருவர்க்கே யாம் என்றும் மீளாத அடிமையாய் அவருடைய திருவடியை அடைந்திருக்கின்றோம்” என்றார். அந்தப் பாடலின் தொடக்கமாகிய “நாம் ஆர்க்கும் குடியல்லோம்” என்பது நாட்டு விடுதலைப் போர் நடந்த காலத்தில் அறிஞர் பலர் நாவிலும் மந்திரம் போல் வழங்கிய தொடராகும்.

எல்லாம் கடவுள் செயலே என்பதை அவர் ஒரு திருத்தாண்டகப் பாட்டில் அழகாகப் பாடியுள்ளார். “நீ ஆடச் செய்தால் அதற்குத் தகுந்தபடி ஆடாதவர் யார்? நீ அடங்கச் செய்தால் அடங்காதவர் யார்? நீ ஓடச் செய்தால் ஓடாதவர் யார்? நீ உருகச் செய்தால் உருகாதவர் யார்? நீ பாடச் செய்தால் பாடாதவர் யார்? நீ பணியச் செய்தால் பணியாதவர் யார்? நீ காணச் செய்தால் காணாதவர் யார்? நீ காட்டாவிட்டால் காணவல்லவர் யார்?

ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே
உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே
காண்பார்ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே.