பக்கம் எண்: - 108 -

திருநாவுக்கரசர் பாடல்களில் பக்தியின் உருக்கம் மிகுந்துள்ளது; திருஞானசம்பந்தர்போல் ஆணையிட்டுக் கூறும் முறை இல்லை. பணிவும் குழைவுமே மிகுதி. கல்விஞானம் மிகுந்திருந்தபோதிலும் அவருடைய பக்தி வாழ்வு கையால் தொண்டு செய்வதைப் போற்றியது. மிகப் பெரிய தத்துவஞானியாக விளங்கிய அவர், தம் ஞானத்தைப்பற்றிப் பெருமை கொள்ளாமல், கோயில் தொண்டு செய்துவந்த தமக்கையாரின் நெறியையே உயர்ந்ததாகப் போற்றினார். அதனால், கையில் உழவாரம் என்னும் களைக்கொட்டுக் கருவியை ஏந்திக் கோயில்களுக்குச் சென்று, அங்கங்கே தரையில் கிடந்த புல்லையும் முள்ளையும் கொத்திக் கல் முதலியவற்றை அப்புறப்படுத்தித் தூய்மை செய்வதையே பெரும்பேறு எனக் கொண்டார். அவ்வாறு தொண்டு செய்தபடியே கோயில்களை வலம்வந்து அவர் பாடிய பாடல்களில், அவர் பெற்ற கல்வித் தெளிவும் தத்துவ ஞானமும் புலனாகின்றன. “உண்மை என்னும் உழவைச் செய்து, விருப்பம் என்னும் விதையை விதைத்து, பொய் என்னும் களையை நீக்கி, பொறுமை என்னும் நீரைப் பாய்ச்சி, தம்மைத் தாமே நோக்கி உணர்ந்து, தக்க சன்மார்க்கம் என்னும் வேலி அமைத்துச் சிறந்த நெறியில் நிற்பார்களானால் சிவகதி என்னும் விளைவு ஏற்படும்.” “மனம் என்னும் தோணியைப் பற்றி, அறிவு என்னும் துடுப்பை ஊன்றி, சினம் என்னும் சரக்கை அந்தத் தோணியில் ஏற்றிக்கொண்டு, பிறவியாகிய கடலில் ஓடும்போடு, மதம் என்னும் பாறை தாக்கி அழியும்போது, அறிவிலே தெளிவாக அறிய இயலாமற் போகுமே. அப்போது, சிவபெருமானே, உன்னை நினைந்து உருகும் உணர்வை அருளி ஆட்கொள்ளவேண்டும்,” இவ்வாறு பல பாடல்களில் தத்துவ ஞானத்தைக் குழைத்துத் தந்துள்ளார்.

திருநாவுக்கரசர் ஒரு முறை கயிலை மலையைக் காண ஆசை கொண்டார்; பயணம் மேற்கொண்டார். அப்போது வழியில் ஒரு குளத்தில் முழ்கி எழுமாறு தெய்வ ஆணை பிறந்ததாம். அவ்வாறு முழுகியபோது கயிலை மலைக் காட்சியைக் கண்டாராம்; திருவையாற்றின் குளக்கரையில் எழுந்தாராம். அப்போது உலகில் வாழும் உயிரினங்களில் கடவுளின் அன்பான ஆட்சியை உணர முடிந்ததாம். அப்போது அவர் பாடிய பாடலில், “சிவபெருமானையும் பார்வதியையும் பாடியவாரே பூவும் நீரும் எடுத்துச் செல்வோரின் பின் யானும் சென்றேன். போன சுவடும் தெரியாமல், திருவையாற்றை அடைந்தேன். அப்போது காதல் உடைய பெண் யானையுடன் யான் யானை வருவதைக் கண்டேன். அந்தக் காட்சியில் சிவபெருமானுடைய திருவடியையே கண்டேன் கண்டறியாத அற்புதமாக கடவுள் காட்சியையே கண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறே மற்றப் பறவை விலங்குகளின் அன்பு வாழ்வினிடையே சிவபெருமானின் காட்சியைப் பெற்றதாகத் தொடர்ந்து பாடியுள்ளார்.