| இவ்வாறு
கன்னிப்பெண்கள் உறங்குவோரை எழுப்புவதாகவும் நீராட அழைப்பதாகவும மேலும் சில பாடல்கள்
ஆண்டாளின் திருப்பாவையில் உள்ளன.
இருவரின் பாவைப் பாடல்களிலும் நாடு செழிக்க மழை பெய்யும்
காட்சி வருணிக்கப்படுகிறது. “மேகமே! இந்தக் கடல் நீரை முன்னே எடுத்துக்கொண்டு
வானத்தில் எழுந்து, உமாதேவி போல் கருநிறம் பெற்று அந்தத் தேவியின் இடைபோல்
மின்னி, அவளுடைய திருவடிகளின் பொற்சிலம்புகள்போல் ஒலி செய்து, அவளுடைய அழகிய
புருவம்போல் வானவில் தோன்றச் செய்து, பக்தர்களுக்கு அவள் சுரக்கும் இனிய அருள்போல்
மழை பொழிவாயாக” என்பது மாணிக்கவாசகரின் திருவெம்பாவையின் மழைக்காட்சி.
“மழையே! நீ உன் நீரைச் சிறிதும் மறைத்து வைக்காதே. கடலில் புகுந்து நீரை
முகந்துகொண்டு ஆராவாரத்தோடு வானத்தில் ஏறி, திருமாலின் நிறம்போல் கறுத்து, அவனுடைய
கையில் உள்ள சக்கரம்போல் மின்னி, அவன் ஏந்திய வலம்புரிச் சங்குபோல் அதிர்ந்து
ஓசை செய்து, அவனுடைய வில் எய்யும் அம்புகள்போல தடையின்றிப் பொழிவாயாக. உலகம்
வாழப் பொழிவாயாக. நாங்களும் பாவை நோன்புக்காக மார்கழியில் நீராடி மகிழ்வோமாக”
என்பது ஆண்டாளின் திருப்பாவையில் காணும் மழைக்காட்சி. அவ்வாறு மழை பொழிவதால்
எவ்வெவ்வாறு நாடு வளம்பெறும் என்பதை ஆண்டாளின் மற்றொரு பாட்டு கூறுகிறது.
தமிழ் இலக்கியத்தில் திருப்பாவையும் திருவெம்பாவையும்
ஆகிய இந்தப் பாவை பாடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே - பதினொன்றாம் பன்னிரண்டாம்
நூற்றாண்டில் சோழர்களின் ஆட்சியின்போதே - கடல் கடந்து இரண்டாயிரம் மைல்களுக்கு
அப்பால் உள்ள சயாம் நாட்டில் பரவின. சோழர்கள் கடாரம் சென்று தங்கள் வெற்றியை
நிலைநாட்டியபோது தமிழர்கள் பலர் அங்கே குடியேறினார்கள். அவர்கள் வழியாகவே ஒன்பது
நூற்றாண்டுகளுக்கு முன்பு பாவைப் பாடல்கள் அங்கே பரவின. சயாம் அரசாங்கத்தினரால்
பல நூற்றாண்டுகளாக ஒரு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த விழாவின் பெயர் “த்ரியெம்பாவ
- த்ரிபாவ” என்பது. பொருள் தெரியாமலே அந்த விழாவின் பெயரை அவ்வாறு வழங்கிக்
கொண்டாடி வந்திருக்கிறார்கள். ‘திருவெம்பாவை - திருப்பாவை’ என்பதே
அதன் பெயர். அந்த விழாவின்போது திருவெம்பாவைப் பாடல்களையும் திருப்பாவைப் பாடல்களையும்
பொருள் தெரியாமல் சொற்களின் உருவம் சிதைத்து மந்திரம் போல் அங்கே பாடிவருகின்றனர்.
பாவைப் பாடல்கள் பழங்காலத்திலேயே அவ்வளவு செல்வாக்குடன் வழங்கிவந்தன என்பதை
இதனால் உணரலாம்.
|