பக்கம் எண்: - 115 -

பெரியாழ்வார்

ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் மூவர் தவிர, மற்றவர்கள் ஏழு எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில் விளங்கியவர்கள். அவர்கள் பன்னிருவரும் திருமாலை வழிபட்டுப் பாடிய பக்திப் பாடல்கள் நாலாயிரம் உள்ளன. நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்ற பெயரால் அவை போற்றப்படுகின்றன. அவர்களுள், பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து பக்திப் பாடல்கள் பால பாடியுள்ளார். கண்ணனுடைய பிறப்புக்காக மகிழ்ந்து கொண்டாடும் கொண்டாட்டம் பத்துப் பாடல்களில் உள்ளன. கண்ணனுடைய கால்விரல், துடை, உந்தி, வயிறு, மார்பு, தோள்கள், கைகள், கழுத்து, வாய், கண்கள், புருவங்கள், காதின் குழை, நெற்றி, முடி ஆகியவற்றின் அழகைக் காணுமாறு சுற்றுப்புறத்தாரை அழைப்பதாகப் பத்துப் பாடல்கள் உள்ளன.

சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாத கமலங்கள் காணீரோ
பவள வாயீர்வந்து காணீரோ

என்னும் பாடல் கண்ணனுடைய பாதங்களின் அழகைக் காணுமாறு அழைத்து மகிழ்வதாகும். பத்துப் பாட்டுகள் கண்ணனாகிய குழந்தை தொட்டிலில் உறங்குமாறு பாடும் பாட்டுகள் ஆகும். பிற்காலத்தில் வளர்ந்த தாலாட்டுப் பாட்டுகள் இவ்வாறு வளர்ந்தனவே ஆகும். இவ்வாறே பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக வைத்துப் பாடிய பாடல்கள் பலவும் பிற்காலக் குழந்தைப் பாடல்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன. நிலாவைக் காட்டிக் குழந்தையோடு விளையாட வருமாறு அழைத்தல், செங்கீரை ஆடுதல், சப்பாணி கொட்டுதல், தளர்நடை நடத்தல், ஓடிவந்து தன்னை அணைத்துக் கொள்ளுமாறு தாய் குழந்தையை அழைத்தல், குழந்தை தாயின் முதுகைக் கட்டிக்கொள்ளுதல், அப்பூச்சி காட்டுதல் (ஒளிந்திருந்து பூச்சி காட்டுதல்), மார்பில் பால் உண்ணுமாறு தாய் குழந்தையை அழைத்தல், காது குத்தி அணிகலன் பூட்டுதல், எண்ணெய் நீராட அழைத்தல், தலை வாரும்போது பராக்குக் காட்டக் காக்கையை அழைத்தல், மாடு மேய்க்கக் கோல்கொண்டு வரச் சொல்லுதல், பூச் சூட்டிக்கொள்ள வருமாறு அழைத்தல், திருட்டிதோடம் ஏற்படாமல் அந்தி வேளையில் காப்புச் செய்தல், குழந்தையின் குறும்புச் செயல்கள்பற்றிச் சுற்றுப்புறத்தார் முறையிடல் கேட்டுத் தாய் வருந்துதல் முதலியவைபற்றிப் பத்துப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். பிற்காலப் புலவர்கள் இத்தனை வகைகளையும் கொள்ளாமல், பத்து வகைகள்மட்டும் கொண்டு, பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு