பக்கம் எண்: - 363 -

தமிழினம்பற்றிய உணர்ச்சி மேலோங்கி நிற்கும். வடிவத்திலும் புதுமை காண்கிறார்கள்; பொருளிலும் புதுமை படைக்கிறார்கள். தாகூரின் கவிதைகளை இளங்கம்பன் தமிழ்ப் பாடல்களாக்கிக் ‘கீதாஞ்சலி கீர்த்தனைகள்’ என்ற பெயரால் தந்துள்ளார். அவ்வாறு தாகூரின் பாடல்களை அறிமுகப்படுத்தித் தொண்டாற்றியவர்கள் வி. ஆர். எம். செட்டியார், அரங்க சீநிவாசன் ஆகியோர்.

‘காமன் மகள்’ என்ற இந்தி நூலின் மொழிபெயர்ப்பான காப்பியத்தை அளித்தவர் ஜமதக்னி. காளிதாசரின் ‘மேக சந்தேசம்’ என்பதும் அவரால் தமிழில் இனிய செய்யுள் வடிவில் தரப்பட்டுள்ளது.

கட்டுரை, திறனாய்வு ஆகிய துறைகளிலும் வல்லவரான சாலை இளந்திரையன் கவிதைத் துறையில் பல நூல்கள் தந்தவர். இயற்கையைப் பாடுவதானாலும், இளந்தலைமுறையைப் பாடுவதானாலும், பழைய கொடுமையச் சாடுவதானாலும், புதிய உலகத்தைக் கனவு காண்பதானலும், அவருடைய கவிதைகள் மிடுக்கும் எடுப்பும் கொண்டு விளங்குகின்றன. ‘அன்னை நீ ஆடவேண்டும்’ என்பது சிறந்த தொகுப்பு. ‘அன்னை தயை’ என்ற பாடலில் இயற்கையில் உள்ள சிறுசிறு காட்சிகள் அழகான கற்பனை ஓவியம் ஆகின்றன.

அன்னை இயற்கை மிகப்பெரியாள் - அவள்
அன்பில் அருளில் எல்லையில்லாள்!
தென்னை மரத்தை வளர்த்திடுவாள் - ஒரு
சின்னப் பசுங்கிளி ஆடுதற்கே!

இயற்கைத் தாய் தென்னைமரத்தை நீண்டு உயர்ந்து வளரச் செய்கிறாள்; எதற்காகவாம்? சின்னப் பச்சைக்கிளி ஊஞ்சல் ஆடுவதற்காகவாம்!

அறிவுஒளி என்னும் கவிஞரின் பாடல்களில் ஒலிநயத்தையும் போற்றலாம்; புதுமைப் புரட்சியையும் உணரலாம். ‘தீமை கொல்ல நாணம் என்ன?’ என்ற பாட்டில் பொதுவுடைமைக் கொள்கையை வற்புறுத்தும் முறையைக் காண்போம்:-

            உச்சி மீதில் ஒருவன் வாழக்
                குப்பைக்கு ஒருவனா - பசித்
                தொப்பைக்கு ஒருவனா - பழங்
                குடிசைக்கு ஒருவனா - இதை
                ஒப்ப ஒருவனா?
           மூட வாழ்க்கை வாழ்ந்தே மக்கள்
                மாய்ந்து போவதா - நலம்