சாய்ந்து சாவதா - பழி
வாய்ந்து வீழ்வதா - அருள்
தீய்ந்து தாழ்வதா?
சொற்கள்
திரும்பத்திரும்ப எதுகைநயத்தோடு ஒரே அளவில் அதே முடிவில் வரும்போது, உணர்ச்சி மிடுக்கும்
எழுச்சியும் பெற்று வளர்கிறது.
இளமையிலே மறைந்த ‘தமிழ் ஒளி’ என்ற கவிஞர்க்குச் சில திறமைகள்
இயல்பாகவே அமைந்திருந்தன. உணர்ச்சிக்கு ஏற்ற ஒலிநயம் அவருடைய பாடல்களில் அமைகின்ற
சிறப்புப் போற்றத்தக்கது. அவருடைய உணர்ச்சியோ ஆழம் மிகுந்தது; நெஞ்சைத் தொட்டு
உருக்குவது. ‘புத்தர் பிறந்தார்’ என்ற சிறு காப்பியம் புத்தருடைய வாழ்க்கையைப்
புதிய நோக்குடன் படைத்தளித்த புதுமை உடையது; ஆனால் அது முற்றுப்பெறாமல் குறையாக நின்றது.
‘வழிப்பயணம்’ என்ற பாட்டு அந்தக் கவிஞருடைய வாழ்க்கையை - இளமையிலேயே
முடிந்த அரிய வாழ்க்கையை - நினைவூட்டுவதாய் நின்று நெஞ்சை வாட்டுகிறது.
தோள் கனக்குது சுமைகனக்குது
தொல்லை வழிப் பயணம் - இது
தொல்லை வழிப் பயணம்!
நாள் கனக்குது நடைகனக்குது
நைந்த வழிப்பயணம் - இது
நைந்த வழிப் பயணம்!
தேகம் நடுங்குது வேகம் ஒடுங்குது
தேச வழிப் பயணம் - இது
தேச வழிப் பயணம்
போது குறுகுது போதை பெருகுது
போகும் வழிப் பயணம் - உயிர்
போகும் வழிப் பயணம்!
பழைய செய்யுள் மரபுகளை விட்டு, சீர் தளைபற்றியும் எதுகை மோனைபற்றியும் கவலைப்படாமல்,
புதுவகையான கவிதைகள் புனைவதில் ஈடுபட்டுள்ளவர் சிலர். அவர்களின் கவிதைகளில் அடிகள்
காணப்படும்; உரைநடைபோன்ற எளிய சொல்லமைப்புக் காணப்படும்; சில புதுக் கற்பனைகளும்
காணலாம். நடை எளிமையாக இருப்பினும் சில புதுக் கவிதைகளில் பொருள் எளிதில் விளங்குவதில்லை;
உணர்ச்சி நுட்பமாய் அமைவது உண்டு. இப்படிப்பட்ட புதுச்சோதனைகளில் ஆர்வம் காட்டுபவர்
சி. சு. செல்லப்பா. ந. பிச்சமூர்த்தி, வல்லிக்கணணன் ஆகியோர் கவிதைகளை
|