இந்தப் புதிய வடிவில் தந்தவர்கள். ‘காட்டுவாத்து’,
‘வழித்துணை’ ‘புதுக் குரல்கள்’, ‘கோடை வயல்’ முதலியன புதுக்கவிதைத்
தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவற்றில் எளிய சொற்களைக் கொண்டு ஒலிநயத்துடன்
அமைக்கப்பட்ட கவிதைகள் சில நல்ல படைப்புகளாக உள்ளன; எதுகை மோனையும் யாப்பு
முறையும் இல்லாவிடினும், அந்தக் குறையை ஒலிநயமும் வாழ்க்கையை ஒட்டிய கற்பனையும்
ஈடுசெய்யுமிடத்தில் கவிதையழகு அமைகிறது.
நாட்டுப் பாடல்கள்
இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையாகவும்
வளமூட்டுவனவாகவும் இருந்துவருவன நாட்டுப்பாடல்கள். அவை உயிராற்றல் மிகுந்தவை.
நாட்டுப் பாடல்கள் கணக்கற்றவை தமிழ்நாட்டில் இருந்துவந்தன; இப்போதும்
சிற்றூர்களில் இருந்துவருகின்றன. ஊர்தோறும் பல்வேறு பாடல்கள் உள்ளன. குறைந்தது
நூறு புத்தகங்களின் அளவிலாவது தொகுக்கத் தக்க அளவிற்குப் பாடல்கள் ஏராளமாக
உள்ளன. இதுவரையில் பத்துத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. வானமாமலை, கி. வா.
ஜகந்நாதன், இலங்கை ராமலிங்கம் முதலானவர்களின் தொகுப்புகள் பல நல்ல பாடல்களைக்
கொண்டிருக்கின்றன. ஆறு அழகப்பனும் இவ்வகையில் ஆர்வம் உடையவர். நாட்டுப்
பாடல்களில் இலக்கியத்தின் எல்லாக் கூறுகளும் உள்ளன. பழங்கால இலக்கியத்திற்கு
அக்காலத்து நாட்டுபாடல்களே தாயாக அமைந்து தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும்
காரணமாக இருந்தன எனலாம். இன்றும், இயற்கையோடு ஒட்டி வாழும் கிராமத்து மக்களின்
இயல்பான உணர்ச்சிகளில் உள்ள புதுமைகளை நாட்டுப்பாடல்களில் காணலாம். உணர்ச்சிச்
செல்வம்மட்டும் அல்லாமல், கற்பனை வளமும் காணலாம்; வடிவ அழகும் காணலாம். அவற்றில்
மக்களின் பேச்சு வழக்கில் உள்ள கொச்சைச் சொற்கள், சொற்களின் திரிபுகள் பலவாகக்
காணலாம். அதைமட்டும் காரணமாகக் கொண்டு, அவற்றின் இலக்கியத் தரத்தைக் குறைவாக
மதிப்பிடுதல் கூடாது.
ஆராரோ ஆராரோ -
கண்ணேநீ
ஆராரோ ஆராரோ
ஆரடித்தார் நீ
அழுதாய்? - கண்ணேஉனை
அடித்தவரைச் சொல்லிஅழு.
மாமி அடித்தாளோ
- உன்னை
மல்லிகைப்பூச் செண்டாலே
மாமன் அடித்தானோ
- உன்னை
மாலையிடும் கையாலே?
அக்கா அடித்தாளோ
- உன்னை
அலரிப்பூச் செண்டாலே
|