பக்கம் எண்: - 366 -

           அடித்தாரைச் சொல்லி அழு - அவர்க்கு
                ஆக்கினைகள் செய்திடுவேன்.
           தொட்டாரைச் சொல்லிஅழு - அவர்க்குத்
                தோள்விலங்கு பூட்டிடுவேன்.
           யாரும் அடிக்கவில்லை - என்னை
                ஐவிரலும் தீண்டவில்லை.
           பசிக்கல்லோ நான்அழுதேன் - என்றன்
                பாசமுள்ள தாயாரே

என்று தூங்கும் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டிப் பாடும் பாட்டு, வீடுதோறும் பாடிப் பழக்கப்பட்ட ஒருவகை நாட்டுப் பாடல் ஆகும். அந்தப் பாட்டே வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு சிறு திரிபுகளுடன் காணப்படும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் பாரதிதாசனும் அதே மெட்டில் வெவ்வேறு தாலாட்டுப் பாடல்களை இலக்கியச் செல்வமாகப் படைத்துள்ளார்கள்.

கிராமத்துக் காதல்பற்றிய நாட்டுப்பாடல்களிலும் இலக்கியச் சுவை மிகுந்திருப்பதைக் காணலாம்:

             வட்ட வட்ட பாறையிலே - குட்டி
           வரகரிசி தீட்டையிலே
           ஆர்கொடுத்த சாயச்சீலை - குட்டி
           ஆலவட்டம் போடுதடி!

    மஞ்சள் புடைவைக்காரி - குட்டி
           மாதுளம்பூக் கூடைக்காரி
           மஞ்சள் புடைவையிலே - குட்டி
           மருக்கொழுந்து வீசுதடி.

           கானக் கரிசலிலே
           களையெடுக்கும் பெண்மயிலே
           நீலக் கருங்குயிலே
           நிற்கட்டுமா போகட்டுமா?

என்று காதலன் ஒருவன் பாடும் பாட்டு, கிராமத்து ஏழைமக்களின் வாழ்வைப்பற்றியதாய்க் கலைநலம் நிறைந்ததாய் அமைந்ததைக் காணலாம்.

காதல் முதலான நிலையான உணர்ச்சிகளும் பண்புகளும் மட்டும் அல்லாமல் நாட்டில் அவ்வப்போது ஏற்படும் பெரிய மாறுதல்களும் நிகழ்ச்சிகளும் கிராமத்தாரின் நாட்டுப்பாடல்களில் இடம் பெறுதல் உண்டு. 1876-இல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரிய பஞ்சம் பின்வருமாறு பாடப்பட்டிருக்கின்றது: