பக்கம் எண்: - 368 -

அவர் உதவிகள் பெற்றதாகவும், அவ்வாறு உதவி செய்த பெண்களின் மகிழ்ச்சிக்காக அந்தப் பாடல்களைப் பாடியதாகவும் புனைந்து கூறப்பட்ட கதை அந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது. நாட்டில் நடந்த போர்களும் போராட்டங்களும் கதைப்பாடல்களாக அமைக்கப்பட்டன. தேசிங்குராஜன் கதை, கட்டபொம்மன் கதை, கான்சாகிபு சண்டை முதலியன அவ்வகையைச் சேர்ந்தவை.

வில்லுப்பாட்டு என்பது நெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் - சிறப்பாக அதன் தெற்குப் பகுதியில் - இருந்துவரும் நாட்டுப் பாடல்வகை ஆகும். பெரிய வில் போன்ற இசைக்கருவியையும் எளிய பக்க வாத்தியக் கருவிகளையும் வைத்துக்கொண்டு, வில்லைக் கையில் உடையவர் பாட்டின் ஒரு பகுதியைப் பாட, பக்கத்தில் உள்ளவர்கள் அதன் தொடர்கள் சிலவற்றைத் திரும்பச் சொல்ல, அவ்வாறே கதை வடிவில் பாடுவதாகும். சில தெய்வங்களின் மேலும் வில்லுப்பாட்டு உண்டு. சுடலைமாடன் வில்லுப்பாட்டு அப்படிப்பட்டது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தலைவர்களான கட்டபொம்மன் முதலானவர்களின் மேலும் அப்படிப்பட்ட நாட்டுப் பாடல்கள் உண்டு.

நாட்டுப் பாடல்களாக நாட்டின் மூலைமுடுக்குகளில் வழங்குவனவற்றைத் தொகுத்து அச்சிடும் முயற்சி ஒரு புறம்; மக்கள் பாடல்கள் போலவே அதே மெட்டிலும் நடையிலும் புதுப்பாடல்கள் இயற்றித் தரும் முயற்சி மற்றொருபுறம்; இந்த இருவகை முயற்சிகளையும் அறிஞர்கள் செய்து வந்தனர்; இன்னும் சிலர் செய்து வருகின்றனர்.

கொத்தமங்கலம் சுப்பு, சுரபி, திருலோக சீதாராம் முதலான கவிஞர்கள் நாட்டுப் பாடலின் மரபுகளை ஒட்டிப் பல புதிய பாடல்களை இயற்றித் தந்தவர்கள். நாட்டில் நடக்கும் புதுப் புது நிகழ்ச்சிகளையும் இயற்கையின் புரட்சிகளையும் இந்தக் கவிஞர்களின் பாடல்களில் காணலாம்.

குழந்தைப் பாடல்கள்

கா. நமச்சிவாய முதலியாரும் மணி திருநாவுக்கரசு முதலியாரும் நாற்பது ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளுக்காக் கதைகளும் பாடல்களும் எழுதிப் பாடப் புத்தகங்களில் சேர்த்தார்கள். அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றிப் பலர் இன்றுவரையில் தொண்டு செய்து வருகிறார்கள்.

சிறுவர்க்கு உரிய பாடல்கள் பல நாட்டில் வழங்கிவந்தன. அவை குடும்பப் பாடல்களாக வழங்கி வந்தன. அந்நிலையில் குழந்தைகளுக்காகப் பாடல்கள் எழுதி உயர்ந்த உணர்ச்சிகளைமட்டும் இலக்கியமாக வாழ