பேராசிரியர் டாக்டர் க . தியாகராசன்,
தலைவர், தமிழியல் துறை
முதன்மையர் - இந்திய மொழிப்புலம்
உறுப்பினர் - ஆட்சிக்குழு
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலைநகர் - 608 002.

மதிப்புரை

செட்டிநாட்டுப் பெருங்கொடை வள்ளல் அண்ணாமலை அரசர் அவர்களின் பெருங்கொடையாலும் பேருள்ளத்தாலும் நிறுவப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வழிவழியாகத் தமிழ்ப்புலவர்களை அரவணைத்து, தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் பீடும் பெருமையும் சேர்த்து நிற்கும் பெருங்கழகமாகும்.

இப்பல்கலைக்கழகத்தின் தமிழியல்துறை, சங்ககாலம் முதல் 1970-ஆம் ஆண்டு வரை வாழ்ந்த தமிழ்ப்புலவர் பெருமக்களின் வரலாறுகளைத் தொகுத்து அகரநிரல் படுத்தி, ‘தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம்’ என்ற திட்டத்தைப் பல்கலைக்கழக மானியக்குழுவின் உதவியுடன் தொடங்கியது. இத்திட்டத்தின்கீ்ழ் மூன்று தொகுதிகளில் 4138 புலவர்களின் வரலாறுகள் வெளியிடப் பெற்றுள்ளன. இப்பொழுது இத்திட்டத்தின்கீழ் வெளிவரும் இந்நான்காவது தொகுதி இறுதித் தொகுதியாகும்.

புலமை சான்ற தமிழ்ப்புலவர்கள், ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் ஆவர். தம்மை வெளிப்படுத்திக் கொள்வதினும் தம் கருத்துக்களை ஆற்றலுடன் வெளிப்படுத்துவதிலேயே பெரிதும் ஆர்வமுடையவர்கள். பண்டைப் புலவர் பெருமக்கள் தம் வரலாறுகளை முறைப்படி எழுதிவைக்காத நிலையில் அவர்கள் வரலாறுகளை நுணுகி ஆய்ந்து ஒன்றுதிரட்டித் தொகுத்தும் வகுத்தும் அளிப்பது ஓர் அரிய பணியாகும்.

இவ் அரிய பணியில் இந்நான்காம் தொகுதியில் ‘மகர’ ‘வகர’ வரிசைகளுக்கு உட்பட்ட 1200 புலவர்களின் வரலாறுகள் நிரல்படுத்தப் பெற்றுள்ளன. இவ் அரிய பணியினைத் தமிழியல் துறைச் சிறப்புநிலைப் பேராசிரியர் டாக்டர். வெ. பழநியப்பன் அரிதின் முயன்று முடித்துள்ளது மிகவும் பாராட்டுதற்குரியதாகும்.