இவர் இத்தொகுதியை முடித்து உதவியுள்ளதுடன், இத்திட்டம் தொடங்கிய
நாள் தொட்டுத் தொடர்பு கொண்டு அனைத்துத் தொகுதிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கதாகும். இவர் தம் கடுமையான உழைப்பே இத்தொகுதிகள் வெளிவருவதற்குப்
பெரிதும் உறுதுணையாக அமைந்துள்ளது.
இப்புலவர் வரலாற்றுக் களஞ்சியத்தின் தனிச் சிறப்பு, தமிழ்த் தொண்டாற்றிய
புலவர் பெருமக்களின் வரலாறு பதிவுக்கு உட்படுத்தப் பெற்றுள்ளமையாகும். எண்ணிலடங்காத
தமிழ்ப் புலவர்களின் வாழ்வியலையும் பயன்கருதாப் பணியினையும் அவர் தம் வழி முறையினர்
ஏற்றுப் போற்றுவதற்கு இக்களஞ்சியங்கள் உற்ற துணையாக அமையும்.
முன்னைய தொகுதிகளைப் போலவே, ஒரு புலவர் ஒரு நூல் எழுதியிருப்பினும்
ஓராயிரம் பாட்டுக்கள் எழுதியிருப்பினும் ஒரு நூலுக்குச் சிறப்புப் பாயிரம் மட்டுமே
பாடியிருப்பினும் அவர்களின் புலமைநலம் போற்றப் பெற்று, இக்களஞ்சியத்தில் இடம்
பெற்றுள்ளனர். போற்றுதற்குரிய புலவர் பெருமக்களின் வரலாறுகளும் அவர் தம் படைப்புக்களும்
படிப்போர் சுவைபட உணரும் வகையில் தரப் பெற்றுள்ளன என்பது மற்றொரு சிறப்பாகும்.
புலவர்களின் படைப்புக்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளமையால் எதிர்காலத்தில் விரிவான
‘தமிழ் இலக்கிய அகர நிரல்’ தொகுப்பதற்கும் இத்தொகுதிகள் வழி காட்டியாக அமையும்.
|