இவை இருசீரோரடிபதினாறம் போதரங்கம். எனவாங்கு-தனிச்சொல் இன்னதிவ் வழக்க மித்திற மிவணல மென்னவு முன்னாட் டுன்னா யாகிக் கலந்தவ ணிலைமை யாயினு நலந்தகக் கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக் கற்பொடு காணிய யாமே பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே” இதுசுரிதகம். இது, தரவு தாழிசை அராகம் அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகமென்னும் ஆறுறுப்புங் குறைவின்றிவந்த வண்ணகவொத்தாழிசைக் கலிப்பா. “வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக் கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின் மாலைதாழ் கூந்தலார் வான்முறையால் வந்தேத்தச் சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தஞ் சொன்முறையால் மனையறமுந் துறவறமு மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடுகட் டிவையுரைத்த தொன்மைசான் மிகுகுணத்துத் துறவரசைத் தொழுதேத்த நன்மைசால் வீடெய்து மாறு. இது, கலித்தளை தட்டுக் கலியோசை தழுவிவந்தமையால் வெண்கலிப்பா. “ஏர்மலர் நறுங்கோதை யெருத்தலைப்ப விறைஞ்சித்தன் வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்தியவென் றார்வரை யகன்மார்பன் றனிமையை யறியுங்கொல் சீர்மலிகொடியிடை சிறந்து.” (4) இஃது ஆசிரியநிரையசைத் தளையான் வந்த வெண்கலிப்பா. |