பக்கம் எண் :
 
46

(இ-ள்.) கரணக் காரகத்துக்கு மூன்றாம் வேற்றுமையும் ஐந்தாம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையுமாம்; கோளிக் காரகத்துக்கு மூன்றாம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் நான்காம் வேற்றுமையுமாம்; அவதிக் காரகத்துக்கு ஐந்தாம் வேற்றுமை ஒன்றுமேயாம்; ஆதாரக் காரகத்துக்கு ஏழாம் வேற்றுமை ஒன்றுமேயாம் (எ-று.)

வரலாறு:-

'தேவதத்தன் சோற்றை அடுகின்றான்' என்புழி, தான் தெரியாக் கருத்தா எழுவாய் வேற்றுமையால் வந்தது.

'தேவதத்தனாற் சோறு பெறப்பட்டது' என்புழி, தான்தெரி கருத்தா மூன்றாம் வேற்றுமையால் வந்தது.

'தேவதத்தனுடைய சொல்' என்புழி, தான் தெரி கருத்தா ஆறாம் வேற்றுமையால் வந்தது.

'சாத்தன் கொற்றனை அஞ்சுவித்தான்' என்புழி, காரணக் கருத்தா எழுவாய் வேற்றுமையால் வந்தது.

'நன்மை தானே வெளிப்படும் விழுமியோர் பக்கல்' என்புழி, கருமக் கருத்தா எழுவாய் வேற்றுமையால் வந்தது.

'விழுமியோர் நன்மை செய்வர்' என்புழி, தலைமைக் கருத்தா எழுவாய் வேற்றுமையால் வந்தது.

இவையிற்றுக்கு மூன்றாம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் ஏற்பித்துக்கொள்க.

'சோறு தேவதத்தனால் அடப்பட்டது' என்புழி, தான் தெரியாக் கருமம் எழுவாய் வேற்றுமையால் வந்தது.

'சாத்தனோடு எதிரிட்டான்' என்புழி, கருமக் காரகம் மூன்றாம் வேற்றுமையால் வந்தது.

'நூலை அறிவித்தான்' எனக் கருமக் காரகம் இரண்டாம் வேற்றுமையால் வந்தது.

'சாத்தனுக்குரிமை சொன்னான்' எனக் கருமக் காரகம் ஆறாம் வேற்றுமையால் வந்தது.

'செய்க்கு நீர் பாய்ச்சினான்' எனக் கருமம் காரகம் நாலாம் வேற்றுமையால் வந்தது.

'கோடாலியான் மரத்தை வெட்டினான்' என்புழி, கரணக் காரகம் மூன்றாம் வேற்றுமையால் வந்தது.