பக்கம் எண் :
 
220தண்டியலங்காரம்

அரசர் மாளிகைகளில் உள்ளதோர் கட்டிடத்திற்குச் சருப்பதோபத்திரம் என்றுபெயர்; அந்தக் கட்டிடம் நாற்புறமும் வாயில் உள்ளதாய், நினைத்த பக்கத்தில் மேலேறவும்,கீழிறங்கவும் கூடியதாய் இருக்கும். இச்சித்திரகவியும் அதேபோன்று இருத்தலால்அப்பெயர் பெற்றது என்க.

(வி - ரை) சர்வதஸ் - எப்பக்கத்தும். பத்திரம் -வாயில்.

(12) அக்கரச்சுதகம் என்பது, ஒரு பொருள்பயப்பதொரு சொற்கூறி, அதனில் ஒவ்வோர்எழுத்தாக நீக்க, வெவ்வேறு பொருள் பயக்கப்பாடுவது.

எ - டு :

 'பொற்றூணில் வந்தசுடர் பொய்கை பயந்தஅண்ணல்

சிற்றாயன் முன்வனிதை யாகி யளித்த செம்மல்

மற்றியார்கொல் என்னின் மலர்தூவி வணங்கி நாளும்

கற்றார் பரவும் கநகாரி நகாரி காரி'

இ - ள் : பொன்னாகிய தூணிலே தோற்றியசோதியாய் உள்ளான் யார்? பொய்கையானது பெற்றதலைமை யுடையவன் யார்? சிற்றாயனாகிய மால்முன்னாள் மோகினி வடிவு கொண்ட போது பெற்றபிள்ளை யார்? என்று கேட்பீராயின், கற்றாரால்மலர் தூவி நாடோறும் வணங்கப்பட்ட கநகாரிஎன்றும், நகாரி என்றும், காரி என்றும் கொள்க எ -று.

கநகாரி - திருமால். நகாரி - முருகவேள். காரி -மாசாத்தன். அக்கரச் சுதகம் - அக்ஷர நீக்கம்.சுதகம் - குறைவு. கநகாரி, நகாரி, காரி என முறையேஒவ்வொரு அக்ஷரம் குறைந்து வருதல் காண்க.

(வி - ரை) அக்கரம் - எழுத்து. சுதகம் - நீக்கம்.கனகன் - இரணியன். அவனை அழித்தலின், திருமால்கனகாரி எனப்பட்டார். நகம் - மலை; ஈண்டுகிரௌஞ்ச மலையைக் குறித்தது. 'தாரகனும் மாயத்தடங்கிரியும் தூளாக வீரவடிவேல் விடுத்தான்'முருகன், ஆதலின் 'நகாரி' என்ற சொல்லால்அப்பெருமானைக் குறித்தார்.

(13) நிரோட்டம் என்பது இதழ் குவிக்கும்உயிரும் மெய்யும் தீண்டாமற் பாடுவது. என்னைசூத்திரம் என்றார்க்கு,

'உஊஒஓ ஒளபம வஇவற் றியைபு
சேராநி ரோட்டத் திறத்து'

என்றாராகலின் என்க.

எ - டு :

'சீலத்தால் ஞானத்தால் தேற்றத்தால்சென்றகன்ற

காலத்தால் ஆராத காதலால் - ஞாலத்தார்

இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாங்

கச்சிக்கச் சாலைக் கனி'

 இ - ள் : ஒழுக்கத்தாலும், அறிவாலும்,மனத்தெளிவாலும், தன்னிடனாகச் செலுத்தின காலத்தின் பெருமையாலும், ஒப்பில்லாத ஆசையாலும், உயர்ந்தோராயினார் நினைப்பவும், எத்தனையுந் தாழ்ந்த எனக்கும், மிகவும் சிறந்து இனிதாகா நிற்கும், கச்சிப்பதியில் உண்டாகிய திருக்கச்சாலையில் தோன்றிய கனியை யொப்பான் எ - று.