பக்கம் எண் :
 
சொல்லணியியல்221

நிரோட்டம் என்பதற்கு இதழோடு இதழ் ஒட்டாதது என்று பொருள். இதனை, நிரோட்டகம், நிரோட்டியம் என்றும் வழங்குவர். இச்செய்யுளில் உஊ ஒஓஒள பமவ இவற்று இயைபு சேராமை காண்க.

(14) ஒற்றுப்பெயர்த்தல் என்பது, ஒருமொழியும் தொடர் மொழியுமாய்ப் பொருள்படும் அவற்றை, அப்பொருள் ஒழிய வேறு பொருள்பட வைப்பது.

எ - டு :

'வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து
மண்குளிரச் சாயல் வளர்க்குமாந் - தண்கவிகைக்
கொங்கா ரலங்க லநபாயன் கொய்பொழில்சூழ்
கங்கா புரமா ளிகை'

 இ - ள் : வளப்பத்தை யுடைய மேகங்கள் கீழாக மேலோங்கி, வானகத்தின்கண் உண்டாகிய கற்பகப் பூக்களை உச்சிமீது உடைத்தாய், உலகெல்லாம் தன் உருவச் சாயையாகிய நிழலைப் பெருக்கும்; குளிர்ச்சி பொருந்திய குடையினையும், மது நிறைந்த மாலையையும் உடைய அநபாயனது கங்காபுரத்தின் மாளிகை எனவும்; வளப்பத்தையுடைய மேகத்தைப் பழிக்கும் தன்மையை உடையதாய், வானகத்தில் உண்டாகிய கற்பகத்தோடு பகை கொண்டு கொடுத்து, உலகத்துள்ளாருடைய உள்ளம் குளிரும் வண்ணம் காவல் புரியும், கங்காபுரத்தை ஆளும் குளிர்ந்த குடையினையுடைய அநபாயனது கை எனவும், இரு வேறு பொருள்பட வந்தவாறு காண்க.

கங்காபுரம் - கங்கை கொண்ட சோழபுரம்..

இதுவுமது

எ - டு :

'பொற்புடைய மாதர் புலவாரோ? பொய்ம்மருவாச்
சொற்பயிலும் பாண! சுடர்மணித்தேர் - கற்புடைய
வஞ்சிநகர் சேரினற மாமருதா ரான்மகிழா
நஞ்சனைய நல்வயலூ ரற்கு'

இ - ள் : பொய்யோடு கூடாத சொற்களைப் பலகாலும் சொல்லாநின்ற பாணா! அவரது சுடர்மணித்தேர் தம் கற்புடைய மனைவி மனையிலே சேருமாயின், பொலிவினையுடைய பரத்தையர் முனியாரோ? தேனால் வண்டு மருவப்பட்ட தாரான் இன்புறுந் தகைமையல்ல; நல்வயல் ஊரனாகிய தலைவற்கு நாங்கள் நஞ்சோடு ஒவ்வோமோ தீண்டு மிடத்து எ - று.

இப்பாட்டின் ஓரடியில், வஞ்சி, நகர், சேர், இல், நறவு, மா, மருது, ஆர், ஆல், மகிழ் என்னும் பத்து மரங்கள் வந்தன. என்னை?

'ஓரடியுட் பத்து மரமுடன் ஒற்றுப்பெயர்த்துத்
தேர்மருவி யூடல் திறம்புனைந்து - நீர்மை
மருதம் புணர்ந்ததுவும் வெண்பாவாய் வையம்
கருதப் பகர்வன் கவி'

என்றாராகலின்.

ஆல் - கசைக்கும், ஓர் மரத்துக்கும் பெயர்.