காப்புச் சிறைமிக்க கையறுகிளவி
‘காப்புச் சிறைமிக்க கையறு கிளவியும்’ என்பது, காப்புச்
சிறைமிகவினாற் கையற்றுச் சொல்லுஞ் சொல். காப்புத்தான் இருவகைய,
நிறைகாவல் சிறைகாவல்
என; அவற்றுள், நிறைகாவல் என்பது நிறையின்
வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமைக்
காப்பாட்கு ஆகாது முறையின்
வேட்கைபெருகக் காணலுறவினான் ஆற்றாளாய்ச் சொல்லும்; அதற்குச்
செய்யுள்:
‘மின்கண் படாவடி வேல்நெடு மாறன்விண் டார்முனைமேல்
மன்கண் படாத மயங்கிருள் நாள்வந்த நீர்த்துறைவற்கு
என்கண் படாத நிலைமைசொல் லாதிளஞ் சேவல்தழீஇத்
தன்கண் படாநின்ற அன்னத்த தேயால் தகவின்மையே’ (214)
‘புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கண்ணார் கானல் வரக்கண் டறிதியோ’ (சிலப். கானல்-33)
எனக் கொள்க.
சிறைகாவல் என்பது, தாய்துஞ்சாமை, நாய்துஞ்சாமை,
ஊர்துஞ்சாமை, காவலர்கடுகுதல், நிலவுவெளிப்படுதல், கூகைகுழறல், கோழிகுரற்காட்டல் என
இவை. அவற்றுள்,
தாய் துஞ்சாமைக்குச் செய்யுள்:
‘ஆயுந் தமிழ்மன்னன் செங்கோல் அரிகே சரிமுனைபோல்
தேயும் நினைவொடு துஞ்சாள் மடந்தையிச் சேயிழையாள்
தாயும் துயில்மறந் தாள்இன்ன நாள்தனித் தாள்நெடுந்தேர்க்
காயும் கதிரோன் மலைபோய் மறைந்த கனையிருளே.’ (215)
இனி, நாய் துஞ்சாமைக்குச் செய்யுள்:
‘வாருந்து பைங்கழற் செங்கோல் வரோதயன் வஞ்சியன்னாள்
சேரும் திறமென்னை தேன்தண் சிலம்பனைத் திங்கள்கல்சேர்ந்து
ஊரும் துயின்றிடம் காவல ரோடன்னை உள்ளுறுத்தெல்
லாருந் துயிலினும் துஞ்சா ஞமலி அரையிருளே.’ (216)
இனி, ஊர் துஞ்சாமைக்குச் செய்யுள்:
‘மாவும் களிறும் பணிநெடுந் தேரும்வல் லத்துப்புல்லாக்
கோவும் துமியவை வேல்கொண்ட கோன்அந்தண் கூடலன்ன
பூவும் புகையும் விரையும் கமழ்ந்துபொன் னாருலகம்
மேவும் விழவொடு துஞ்சா திரவிவ் வியன்நகரே.’ (217)
|