சூத்திரம்-45
புகழும் கொடுமையும் கிழவோன் மேன.
என்பது என்னுதலிற்றோ எனின், தலைமகற்கு உரியதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்: புகழும் கொடுமையும் என்பது - புகழ் என்பது
தக்கான் எனப்படுதல்; கொடுமை என்பது தகான் எனப்படுதல் என்றவாறு;
கிழவோன் மேன என்பது-அவை இரண்டும் தலைமகன்கண்ண
என்றவாறு.எனவே, இத்தன்மைத்துத் தலைமகன் ஒழுகலாறு என்றவாறு.
அஃதாமாறு தலைமகள்மாட்டு உறைந்தக்கால் தக்கான் எனப்படுதலும்,
பரத்தையர்மாட்டு உறைந்தக்கால் தகான் எனப்படுதலும் என்றவாறு.
யாராலோ அவை சொல்லப்படுவது எனின், வாயில்களான் எனக்
கொள்க. அவர், ‘புகழுடையன்’ என்பதற்குச் செய்யுள்:
தக்கான் என்றல்
‘கோடிய நீள்புரு வத்து மடந்தை
கொழும்பணைத்தோள்
வாடிய வாட்டம் உணர்ந்து மனையிடை வந்தமையால்
ஆடியல் யானை அரிகே சரிதெவ்வர் போலகன்று
நீடிய காதலர் தாமே பெரியர்இந் நீள்நிலத்தே.’
(289)
இனி, அவர், ‘தகான்’ என்றதற்குச் செய்யுள்:
தகான் என்றல்
‘விண்டுறை தெவ்வர் விழிஞத் தவியவெள்
வேல்வலங்கைக்
கொண்டுறை நீக்கிய கோன்வையை நாடன்ன கோல்வளையிவ்
வண்டுறை கோதை வருந்தநல் லாரில்லுள் வைகுதலால்
தண்டுறை சூழ்வயல் ஊரன் பெரிதும் தகவிலனே’
(290)
என்பது.
(10) |