நமக்கு உறவல்லன் அவனை முயங்காதீர் என எம் தோளோடு மாறுபட்டு ஆனால் முயங்க நினைந்து வாடும் நெஞ்சம் உடையே மாகியயாங்கள். ஊரன் நமக்குப் பற்றுக்கோடல்லன் என்று, பேசாமல் ஓரூரிடத்துத் திரளும் நின் பரத்தையருள், நீ சொன்ன குறியிடம் வந்து நின்னைக் காணாமல் எம் வீட்டுக் கதவைத் தட்டி அதனால் கைவளையல் உடையும் பரத்தையரை அவர்க்கு நேராக இருந்து வருந்துவோமோ? அதனாற் பயன் என்? பரத்தையர் முலை தோய்ந்ததால் வாடிய நின் மார்பின் மாலை எம்மை யிகழ அதனால் செப்பில் வாடிய மாலைபோல் உள்ளயாம், ஊடிய இற் பரத்தையரை இடையன் ஒடித்து எறிந்த மரம்போல் ஆக்கிப் பிற பரத்தையர் மயக்கம் தீர்க்கும் அவன் மார்பு என்னும் சொல்லை நோவேமோ? என்ன உரிமையுளது. நீ புதுமணம் செய்யும் வீடாக எம் வீட்டைப் புகுந்து பொலிக பொலிக என்ற நின் புலனப் பாணனைக் கண்டயாம், தேரொடு திரிந்து சேரிகள்தோறும் நீ புகுந்தவீடு எது என்னும் அப்பாணனைப் பழிப்பேமோ? என்ன உரிமையுளது. ஐய! நீ வீட்டிற்குவரின் நின்னைப் புணர்ந்து மகிழ்ந்து பிரியின் எம் தோள்வாட, இப்படியானார் இவர் என உணர்ந்தவர் கூறவும் நின்னைப் பெற ஏக்கற்றுப் பெற்றுக் கூடும்போது எமக்கு நின் மார்பு நனவில் கூடினாலும் நின் எண்ணம் வேறாதலின் நின் முயக்கமானது கனவில் பெற்ற செல்வம் போலாகும். |