“ஞாலம் வறந்தீர” என்னும் மருதக்கலியுள், |
“அடக்கமில், போழ்தின்கண் தந்தைகாமுற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்கான்” |
எனவும், |
“வழிமுறைத் தாயுழைப்புக்கான்” |
எனவும், |
“தலைக்கொண்டு நம்மொடு காயுமற்றீதோர் புலதத்கைப் புத்தேளில் புக்கான்” |
(கலி-82) |
எனவும் |
கூறுதலிற் புதல்வனை யீன்றாள் மூன்றாங் காமக்கிழத்தி1 யாயிடவாறும் இவன்மாட்டுத் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப்பரத்தை யுள்ளிக் கூற்று நிகழ்ந்தவாறுங் கண்டு கொள்க. பிறவும் அன்ன, தோழி கூற்றும் இவட்கும் ஒக்கும். |
நச் |
இது, காமக்கிழத்தியர் கூற்றெல்லாந் தொகுத்துக் கூறுகின்றது. காமக்கிழத்தியராவார் கடனிறியும் வாழ்க்கையுடையராகிக் காமக்கிழமை பூண்டு இல்லற நிகழ்த்தும் பரத்தையர், அவர் பலராதலிற் பன்மையாற் கூறினார். அவர் தலைவனது இளமைப் பருவத்திற்கூடி முதிர்ந்தோரும் அவன் தலைநின்று ஒழுகப்படும் இளமைப் பருவத்தோரும் இடைநிலைப் பருவத்தோரும் காமஞ்சாலா இளமையோருமெனப் பல பகுதியராம். இவரைக் ‘கண்ணிய காமக்கிழத்திய’ ரெனவே கண்ணாத காமக்கிழத்தியரும் உளராயிற்று. அவர் கூத்தும் பாட்டும் உடையவராகிவருஞ் சேரிப்பரத்தையருங் குலத்தின்கண் இழிந்தோரும் அடியரும் வினைவல பாங்கினரும் பிறருமாம். இனிக் காமக்கிழத்தியரைப் பார்ப்பார்க்குப் பார்ப்பனியை யொழிந்த மூவரும், ஏனையோர்க்குத் தங்குலத்தல்லதோரும் வரைந்து கொள்ளும் பரத்தையருமென்று பொருளுரைப்பாரும் உளர். அவர் அறியார் என்னை? சிறப்புடைத் தலைவியரொடு பரத்தையரையுங் கூட்டிக் காமக்கிழத்தியரென்று ஆசிரியர் சூத்திரஞ் செய்யின் மயங்கக்கூறலென்னும் குற்றம் தங்குமாதலின் அன்றியுஞ் சான்றோர் பலருங் காமக்கிழத்தியரைப் பரத்தையராகத் தோற்றுவாய் செய்து கூறுமாறும் உணர்க. |
1. தொடக்கத்துத் தாய்-தலைவி, வழிமுறைத்தாய் -முதற் காமக்கிழத்தி. புத்தேள்-புதிய இரண்டாம் காமக்கிழத்தி. புதல்வனின் தாய் மூன்றாம் காமக்கிழத்தியாவாள். |