1 பொருள்: தலைவ! யானைகள் போர் வேட்டு மாறுபடும் பாசறையில் முரசம் முழங்க வேந்தனும் வெற்றி கொண்டு கொடியுயர்த்தினான்; ஆநிரைகள் கன்றுகளுடன் முல்லை நிலங்களில் துள்ளிவரக் கோவலரும் தம் குழலை வாய்வைத்தனர். நீ நின் ஏவலர் ஏவல் கேட்டு விரைந்து நடக்க, புரவியானது வழியே விரைய வலவன் கடிவாளத்தை வலிந்து பிடித்துச் செல்லப் புலவர் பாடுதலையே குறிக்கோளாகக் கொண்டு புண்பட்ட மார்பில் சந்தனம் புலர வெற்றிகொண்டமையால் வந்த உவகையோடு நின் மனையில் புகவிரும்பிச் செல்வாயாயின், தீதற்றவளாகிய நின் மனைவியின் நுதற் பசப்பானது இனி எங்குச் சென்று தங்குவதாகும். 2 பொருள்: பாண! இதைக் கேள். விறலவன் (தலைவன்) மாலைப் பொழுதில் பசிய வெண்ணிலவில் குறிய கால்களையுடைய கட்டிலில் உள்ள நல்ல பூம் படுக்கையிடம் சென்று ஆற்றாமையால் யானை உயிர்ப்பதுபோல் உயிர்த்து விருப்புடன் அங்கு படுத்திருந்த புதல்வனைத் தழுவினான். புதல்வன் தாயானவள் அவனை புறத்தைத் தழுவினாள். இது அவளது கற்பு மாண்பைக் காட்டுதலுடையதாகும். |