1. பொருள்: பாணனே! தோணிகள் கடலிற் செல்லாமல் கரையில் இருத்தலால் சுறாமீன்கள் அவற்றிற்பாயும் படியாகப் பரதவர் நடமாடும் நிலையில் இருந்தாலும் அலர் தூற்றும் பெண்டிர் தம்மைப் பற்றி அலர் தூற்றினாலும் தலைவன் தம் தேர் காலம் தாழ்த்து நிற்கும்படியாகப் பகலிலும் நம்மை நீங்காமல் வந்து போவான். இது களவுக் காலத்து நிகழ்ச்சி. இக்கற்பு காலத்தில் தனக்கு வேட்கை நீங்குதலால் சென்ற விடத்தினின்றும் மீண்டு வாராதவர் நமக்கு என்ன உறவுடையர் என எண்ணாமல் மனையில் உள்ள பனைமரத்து அன்றில் ஒன்று பிரியினும் மற்றொன்று துஞ்சாது எனத் தன் நெஞ்சுக்குக் கூறிக்கண்களில் நீர் நிறைந்தனள் தலைவி. அதற்கு யான் (தோழி) என் செய்யவல்லேன்? இதை நீ மூதூரிடத்து மறைவாய்ச் சென்று தலைவனுக்குக் கூறின் என்ன குறைவரும் உனக்கு?-தோழி பாணனிடம் கூறியது. 2. பொருள்: அழகிய நிறமுடைய எருமையுழுத சேற்றில் நெய்தலானது ஆம்பலொடு தழைக்கும் கழனியூரனுக்கு மகளாகிய இவள் பழனவூரனுக்குப் பாயலில் அமைந்த நல்ல துணையாவாள். |