பக்கம் எண் :

186தொல்காப்பியம் - உரைவளம்
 

கண்ணும்     என்பது  -  காதற்  சோர்வினானும்  ஒப்புரவுடைமை  யானுந்  தாய்போற்  கழறிப்
பொருத்தப்பட்ட மனைவியைக் காய்தலின்றித் தலைமகன் மாட்டுப் பொருத்தற் கண்ணுங் கூற்று நிகழும்
என்றவாறு.
  

இதுவும்  அவள்  கூற்று.  காதற்  சோர்வு  என்பது  தன்மாட்டுக்  காதல்  சோர்தல்.  இது தலைமகன்
மாட்டுத் துனியுளவழி நிகழும் நிகழ்ச்சி.
  

உதாரணம்:
  

“வயல்வெள் ஆம்பல் சூடுதரு புதுப்பூக்
கன்றுடைப் புனிற்றா தின்றமிச்சில்
ஒய்விடு நடைப்பகடாரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை யாயின் என்சொற்
கொள்ளல் மாதோ முள்ளெயிற்றோயே
நீயே பெருநலத் தகையே அவனே
நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித்
தண்கமழ் புதுமலர் ஊதும்
வண்டென மொழிப மகனென்னாரே”
1

(நற்றிணை 290)
  

இது காமக்கிழத்தியாகிய தலைமகட்குமுன் வரையப்பட்ட பரத்தை கூற்று.2
  

இன்னகைப்  புதல்வனைத்  தழீஇ  யிழையணிந்து  பின்னை  வந்த வாயிற் கண்ணும் என்பது - இனிய
நகையையுடைய புதல்வனைத் தழீஇ இழையணிந்து பின்னை வந்த வாயிலின்
  


1. பொருள்:  வயலில் உழவர் நெற்சூட்டுடன் அரிந்து கொணர்ந்த ஆம்பலை ஈன்ற   அணிமையுடைய
பசுதின்று மிஞ்சியதை  உழவரின்  உழுதொழில்  விட்டு  ஓய்வெடுக்கும்  பகடுகள்   தின்னும்படியான
ஊருக்குடைய தலைவனின் தொடர்பை  (நீண்டநாள் முயக்கத்தை)நீ விரும்புவாயாயின் ஏ தலைவியே!
என்   சொல்லை   ஏற்றுக்கொள்.   நீ   பெரிய அழகும் குணமும் உடையை அவனோ நடுஇரவில்
பொய்கையிற் சென்று புதுமலர் உண்ணும் வண்டு போல்வன்.  ஆண்மகன் அல்லன் என்னும் இவ்வூர்.
(ஆதலின் புலவாதே அவனை ஏற்றுக் கொள்க).
  

2. இத்தொடர் தவறு.  காமக்  கிழத்தி கூற்றே கூற வேண்டுவது. இதன் விளக்கம் பற்றித் தாய் போற்கழறி
(32) என்னும் சூத்திர உரைகளின் முடிவில் சிவ விளக்கம் காண்க.